மக்கள் எமக்குத் தந்த ஆணைக்கு ஏற்ப பொறுப்புக் கூறலைச் சரியாகச் செய்து மாகாண சபையை ஒட்டு மொத்த நாட்டுக்கும் முன்மாதிரி மிக்கதாக வழிநடாத்திக் காட்டி விட்டு பதவிக் காலம் முடிந்து வெளியேறினோம், மாறாக நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்படவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.ஏறாவூரில் வறுமைக்கோட்டுக்கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழில் முயற்சிக்காக தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக் குஞ்சுகள் மற்றும் பராமரிப்புக்கான உபகரணத் தொகுதிகளை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 22.10.2017 ஏறாவூர் தாறுல் உலூம் வளாகத்தில் இடம்பெற்றது.
அங்கு பயனாளிகள் மத்தியில் மேலும் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர், கிழக்கு மாகாண சபையில் முன்னர் விவசாய அமைச்சராக இருந்து பின்னர் அதன் இறுதி இரண்டரை வருட காலமும் முதலமைச்சராக நான் பணியாற்றிய காலத்தில் கடைசி நிமிடம் வரை ஒரு நல்லாட்சியை முன்மாதிரியாக நடாத்தி பாதிக்கப்பட்ட அனைத்துச் சமூக மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அபிவிருத்திகளைச் செய்வதில் அக்கறை காட்டினேன்.
அதன் பயன்களை அடுத்து வரும் மாகாண சபை நிருவாகமும் கண்டு கொள்ளும்.
நமது குறுகிய கால துரித அபிவிருத்திப் பணிகளை சகித்துக் கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட தீய சமூக விரோதிகள் எமது மாகாண சபை நிருவாகத்தை விமர்சித்து வந்து இப்போது வாயடைத்துப் போயுள்ளனர்.
நாம் செய்து சாதித்துக் காட்டிய எல்லா அபிவிருத்திகள், செயற்திறன் மிக்க நிருவாகம் என்பனவற்றையெல்லாம் விட கிழக்கு மாகாணத்தில் எல்லாக் கட்சிகளும் எல்லா இன மதங்களையும் குறிப்பாக பிளவுபட்டுக் கிடந்த தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்களையும் கூடவே சிங்கள மக்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சி செய்து சகவாழ்வை உருவாக்கியது சாதனையாகும்.
ஆட்சி யாருக்கும் நிரந்தரமாக ஒருபோதும் எழுதிக் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், அது கிடைத்து விட்டால் நல்லதைச் செய்து காட்ட வேண்டியது நமது கடமை. அதனை நாம் செய்திருக்கின்றோம் என்ற திருப்தி நிறைவாக உள்ளது.
நான் அரசியல் அந்தஸ்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்வதில் எனக்குள்ள திருப்தி வேறெதிலும் இல்லை. அதனடிப்படையில்தான் இந்த வாழ்வாதார உதவிகள் இன மத வேறுபாடுகளுக்கப்பால் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற வறிய மக்களுக்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றார்.
0 Comments:
Post a Comment