8 Mar 2026

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சர்வதேச மகளிர் தினம் தொடர்பான அறிக்கை (2026 மார்ச் 8)

SHARE

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சர்வதேச மகளிர் தினம் தொடர்பான அறிக்கை (2026 மார்ச் 8)

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சர்வதேச மகளிர் தினம் தொடர்பான அறிக்கை (2026 மார்ச் 8) ஒன்றை இன்றயத்தினம் ஞாயிற்றுக்கிழமை(08.03.2026) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

பெண்களின் சம உரிமைகள், நீதி மற்றும் கௌரவம் என்பவற்றுக்காகத் தொடரும் போராட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் என்பது பெரும் குறியீட்டுருவான முக்கியத்துவத்தினை வகிக்கின்றது. இந்த வருட சர்வதேச மகளிர் தினத்துக்கான ஐக்கிய நாடுகள் தொனிப்பொருள், உரிமைகள்.நீதி.நடவடிக்கை.சகல பெண்களுக்காகவும் சிறுமிகளுக்காகவும்என்பதாகும்.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினைப் புதுப்பிக்கும் ஒரு நாளாகவே பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகிய நாம் இந்த நாளைக் கருதுகின்றோம். இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் வகிபாத்திரம் மற்றும் செயற்பாடுகள் பற்றிய சுருக்கமான விளக்கத்தினை வழங்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த நாள் அமைந்துள்ளது.

இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, 2004 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டவாக்க மேம்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகத் திகழ்கின்றது. அரசியலமைப்புப் பேரவையினதும் பாராளுமன்றப் பெண்கள் குழுவினதும் விதப்புரைகளின் அடிப்படையில் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கௌரவ சனாதிபதி அனுர குமார திசநாயக்கவினால் நியமிக்கப்பட்டனர். 

ஒரு சுயாதீனமான ஆணைக்குழு என்ற அடிப்படையில், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பரந்த அதிகாரங்கள் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவிற்கு ஆணையாக வழங்கப்பட்டுள்ளன. பெண்களின் உரிமைகள் பற்றிய மீறுகையினை விசாரித்துப் புலனாய்வு செய்வதற்கான தத்துவம் முதற்கொண்டு, மத்தியஸ்தத்தின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்தல், பெண்களின் உரிமைகளுக்காக ஆதரித்துவாதாடுவதற்காகவும் பெண்களின் உரிமைகள் பற்றிய கெள்கைகள் மற்றும் நடைமுறைகளை அரச நிறுவனங்கள் மாத்திரமன்றி தனிநபர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இயைந்தொழுகுவதைக் கண்காணித்து மதிப்பிடுவதற்காகவும் பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் பற்றிய ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்குதல் வரை இந்தத் தத்துவதங்கள் பரவிக் காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பெண்களின் வலுவூட்டல் சட்டம் மற்றும் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஆகியன நாடு முழுவதுமுள்ள பெண்கள் உரிமைகள் கூட்டுக்களதும் அமைப்புக்களதும் தசாப்த கால போராட்டங்களினதும் அயரா முயற்சியினதும் உச்சபட்ச விளைவே என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.  

2025 செப்டெம்பரில் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து, ஆணைக்குழுவுக்கென சுயாதீனமான அலுவலக வளவுகள் இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை போன்ற பல சவால்களுக்குப் பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. ஆணைக்குழுவின் முதலாவது தவிசாளர் நியமிக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே அவர் அண்மையில் அப்பதவியினை இராஜினாமாச் செய்தமையும் இச்சவால்களுள் உள்ளடங்குகின்றது. சம்பந்தப்பட்ட சகல பங்கீடுபாட்டாளர்களினதும் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் இச்சவால்கள் தீர்க்கப்படவேண்டியுள்ள நிலையில், கடந்த மாதங்களில் எமக்கு எண்ணற்ற வழிகளில் உதவிய அனைவரினதும் அந்த உதவிகளை நாம் ஆழமான மெச்சுதலுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த நாட்டின் பெண்கள் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றுள் பின்வருவன உள்ளடங்குகின்றன என்பதுடன் இச்சவால்கள் பின்வருவனவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவையல்ல: பெண்களைப் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தல், பொருளாதார வலுவூட்டலின்மை, பாகுபாடுமிக்க சட்டக் கட்டமைப்புக்களாலும் நிறுவனக் கட்டமைப்புக்களாலும் ஏற்படும் முழுமையான அநீதிகளுக்குப் பெண்கள் உட்படல், அரசியல் பதவிகளிலும் தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்கள் போதியளவு இடம்பெறாமை, ஒரு பால்நிலையினருக்கு மாத்திரம் அதிக தாக்கம் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புறுநிலைகள். எனவே, சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் நீதி என்பவற்றுக்கான பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு  என்பவற்றினை உறுதிப்படுத்த பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவினால் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன. 

இந்த பின்னணியை கருத்தில் கொண்டு, கடுமையான வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், பணியாளர்களும் பொருத்தமான அலுவலக வளவுகளும் இல்லாதிருக்கையிலும் எம்மால் இனியும் மௌனம் காக்க முடியாது என நாம் உறுதியாக நம்புகின்றோம். எனவே, பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதான செயற்பாடுகளில் சிலவற்றினை பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு தொடங்கும். அவற்றுள் உள்ளடங்குபவை.

பெண்களின் உரிமைகள் தொடர்பான, 2024 ஆம் ஆண்டின் பெண்கள் வலுவூட்டல் சட்டம் தொடர்பான, பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், நியமங்கள் மற்றும் தராதரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தகவல்களைப் பரப்பவும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்;

பெண்களின் உரிமைகளை மேம்படுத்திப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கும் ஆய்வினைப் பொறுப்பேற்று அறிவினைப் பரப்புதல்;

பின்வருவன தொடர்பாக அரசாங்கத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருக்கும் விதப்புரைகளை வழங்குதல்: ) உ்ள்நாட்டுச் சட்டங்களும் கொள்கைகளும் நிர்வாக நடைமுறைகளும் பெண்களின் உரிமைகள் தொடர்பாகச் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் மற்றும் தராதரங்களுக்கு அமைவாக உள்ளன என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; ) பெண்களின் உரிமைகளை மதிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் தேவைப்படும் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் நிர்வாகப் பணிப்புரைகளையும் நடைமுறைகளையும் உருவாக்கல்;

பெண்களின் உரிமைகள் பற்றிய உத்தேசச் சட்வாக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றின் தாக்கத்தினை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்களுக்கு விதப்புரைகளை வழங்குதல்;

பெண்களின் உரிமைகளைப் பாதிக்கும் முக்கியமான விடயங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாகப் பகிரங்கக் கூற்றுக்களை வெளியிடுதல்;

பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் பொதுவான கொள்கைகளையும் நடைமுறைகளையும் போஷிப்பதற்காக அரச நிறுவனங்களுடனும் அரச சார்பற்ற செயற்படுனர்களுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் இணைந்து செயற்படுதல்; மேலும் பெண்களின் மேம்பாடு மற்றும் வலுவூட்டல் தொடர்பாக ஒரு தேசியக் கொள்கையினை உருவாக்கல்.

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல் காரணமாக, பெண்களின் உரிமைகள் மீறுகை தொடர்பாக விசாரித்துப் புலனாய்வு செய்யும் முக்கியமானதும் இன்றியமையாததுமான செயற்பாட்டினைப் பொறுப்பேற்பதற்கு ஆணைக்குழுவுக்குத் தற்போது இயலாமலிருக்கின்றது. பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, விசாரித்துப் புலனாய்வு செய்யும் அதன் செயற்பாடுகளின் அ்தீத முக்கியத்துவத்தினைப் புரிந்துகொள்வதுடன், நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் ஆணைக்குழுவினை இயங்கவைப்பதற்குத் தேவைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதற்காக முனைப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. 

முடிவாக, நீதியில் நிலவும் இடைவெளியினை நிரப்பவும், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறையினையும் பாகுபாட்டினையும் இல்லாதொழிப்பதற்கும் பெண்களின் பொருளாதார வலுவூட்டலை வலுப்படுத்தவும் எம்முடன் கூட்டாகப் பணியாற்ற நாம் சகல அரச நிறுவனங்களையும் அரச சார்பற்ற செயற்படுனர்களையும் சிவில் சமூகத்தினையும் பொதுமக்களையும் அழைக்கின்றோம். பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு சுயாதீனமானதும் சட்ட ரீதியானதுமான நிறுவனப் பொறிமுறையினைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் பெண்கள் உரிமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தசாப்த காலப் போராட்டத்தினை நாம் கௌரவிக்கின்றோம். ஆணையாளர்கள் என்ற ரீதியில், இலங்கையிலுள்ள சகல பெண்களுக்காகவும் சமமான உரிமைகளையும் கௌவரத்தினையும் நீதியினையும் பற்றறிப்பிடிக்கும் ஒரு சமூகத்தினை உருவாக்குவதற்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு சாத்தியமான சகல முயற்சிகளையும் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எமது கடப்பாட்டினை நாம் மீளுறுதிப்படுத்துகின்றோம். என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


SHARE

Author: verified_user

0 Comments: