வசதி படைத்தோர் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சித்தாண்டியிலுள்ள சிகண்டி பவுண்டேசன் அமைப்பின் கலையார்வ செயற்பாடுகளை நேரில் அறிந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை 06.06.2017 அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து அங்கு கலைஞர்கள், அமைப்பின் முக்கியஸ்தர்கள், பயிலுநர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீநேசன்@
கல்விக்கான முதலீடு என்பது நீண்ட காலத்திற்குரியதாகும். அந்த முதலீட்டின் மூலமாக நிலைத்து நிற்கக்கூடிய சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்ள முடியும். எனவே 30 வருட போரால் பாதிக்கப்பட்ட நாம் கற்போம் கற்பிப்போம் கல்வியால் உயர்வோம் நிலையான அபிவிருத்தியினை எய்துவோம், என்று திட சங்கற்பம் கொள்ள வேண்டும்.
தமிழரினது கலைப் பண்பாடுகளையும் கல்வியினையும் வளர்ப்பதில் சித்தாண்டியிலுள்ள சிகண்டி பவுண்டேசன் அமைப்பு பாடுபட்டுழைப்பது வரவேற்கத் தக்கது.
தமிழரின் பாரம்பரிய இசை, நடனம், நாட்டுக்கூத்து போன்றவற்றுக்கான பயிற்சிகள் தமிழ் மாணவர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவதும் பாராட்டத்தக்கது.
சித்தாண்டியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியில் எழுச்சி ஏற்பட வேண்டும் என்ற மேற்படி அமைப்பினரின் வேணவாவை நான் கருத்திலெடுத்துள்ளேன். எதிர்காலத்தில் இதற்காக உதவுவேன்”என்றார்.
இதேவேளை சித்தாண்டிப் பிரதேசத்திலுள்ள தமது கிராம பாடசாலையின் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்வி அடைவ மட்டம் 22 வீதமாக உள்ளதாகவும் சித்தாண்டி சிகண்டி பௌண்டேசன் நிருவாகிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினர்.
இதனை உயர்த்துவதற்குக் கிராம இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அவர்களை ஒருங்கிணைத்து செயற்படுவதில் முன்னோடிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். வரலாற்று புகழ்பெற்ற மத்திய மகா வித்தியாலயம் தனது பழைய சாதனைகளை படைக்க வேண்டும். என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment