6 Jun 2017

மூவின மாணவர்கள் கற்கும் உயர் கல்வி நிலையங்களில் முரண்பாடுகளைத் தீர்க்கும் தேசிய இன நல்லிணக்கத்திற்கான கற்கை நெறி

SHARE
கிழக்குப் பல்கலைக் கழகம், மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் உட்பட பல்லின மாணவர்களும் கற்கும் நாட்டின் 8 உயர் கல்வி நிலையங்களில் முரண்பாடுகளைத் தீர்க்கும் தேசிய இன நல்லிணக்கத்திற்கான கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


2018ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகங்களில் இந்த புதிய கற்கை நெறியைச் சேர்த்துக்கொள்வதற்கான உடன்படிக்கை தற்பொழுது கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் கூறினர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முரண்பாடுகளை தீர்த்தல் மற்றும் நல்லிணக்கம் என்ற பெயரில் இந்தக் கற்கை நெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கம் மற்றும் பல்ககைகழக மானியங்கள் ஆணைக்குழு உயர்கல்வி ஊடாக தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், றுகுணு, தென்கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை பௌத்த கல்லூரி மற்றும் ஜாமியா நழீமியா கலாபீடம் ஆகியவையே இப்பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ள ஏனைய உயர் கல்வி நிலையங்களாகும்.

இந்த உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்  முரண்பாடுகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கற்கை நெறியை தொடரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் எதிர்காலத்தில் இன முரண்பாடுகள் விரிசலடையாமல் இருப்பதற்கும் அழிவுபூர்வமான முரண்பாட்டுச் சிந்தனைக்குப் பதிலாக ஆக்கபூர்வமான அபிவிருத்திச் சிந்தனை ஏற்படுவதற்கும் தோதாக எதிர்கால இளைஞர் சமூகம் கட்டி எழுப்பப்படுவதை நோக்காகக் கொண்டே இந்த புதிய தேசிய நல்லிணக்க முரண்பாட்டுத் தீர்வுக்  கற்கை நெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி  சிவஞானம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: