தற்சமயம் நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு ஆட்சி அதிகார மாற்றம் என்பது தீர்வாகாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவரால் திங்களன்று 29.05.2017 வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதாயின் அந்த சமூகம் ஒற்றுமைப்பட்டு அரசியல் அதிகாரம் உள்ள பலமுள்ள சக்திகளாக மாற வேண்டும்.
இப்பொழுது நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திறகெதிராக நாளாந்தம் பல பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்குத் தீர்வாக நாங்கள் வெறுமனே ஆட்சிகளை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.
கடந்த ஆட்சிக்காலத்திலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.
அளுத்கமை - பேருவலை போன்ற இடங்களில் பல சம்பவங்கள் ஏற்பட்ட நேரத்தில் கடந்த ஆட்சியை தூக்கி எறிந்து மைத்திரிபால சிறிசேனவை அந்த இடத்துக்கு கொண்டு வந்தால் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கலாம் என்று கருதி முஸ்லிம் சமூகத்திலே 90 சதவீதமான மக்கள் வாக்களித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம்.
ஆனால் இன்று அதை விட மோசமாக முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பல வன்செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வட மாகாணத்திலே முஸ்லிம்களுக்குச் சொந்தமான 45 ஆயிரம் ஏக்கர் காணிகள் வனாந்திரமாக இப்பொழுது பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்காக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கிறார்கள். மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டு ரணிலை ஜனாதிபதியாக்கினால் முஸ்லிம்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் யார் வந்தாலும் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்படாதவரை முஸ்லிம்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.
முஸ்லிம்களுக்கெதிரான அசம்பாவிதங்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகின்றது.
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அந்த சமூகம் பிரச்சினையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.
எனவே நாங்கள்தான் பலமுள்ள சமுதாயமாக மாறவேண்டும். நாங்கள் அதிகாரமுள்ளவர்களாக மாறவேண்டும். எங்களுக்கு சகல வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அதிகாரம் இல்லை. நாங்கள் இன்று அமைச்சர்களாக, இராஜாங்க அமைச்சர்களாக, பிரதி அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக 21 பேர் இருக்கின்றோம். ஆனால் பிரச்சினை ஒன்றை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொள்ள அதிகாரம் அற்றவர்களாகவே அந்த 21 பேரும் ஆசனங்களில் அமர்ந்திருக்கின்றோம்.
நாங்கள் அனைவரும் அதிகாரம் உள்ளவர்களாக மாறாதவரை எங்களுக்குரிய பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
வெறுமனே ஜனாதிபதியாக இருக்கின்றவர்களை காலத்துக்குக் காலம் எத்தனை பேரை மாற்றினாலும் இதன் மூலமாக எங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.
எங்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. முஸ்லிம் அமைச்சர்களாகிய நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே, கல்விமான்களிடையே, ஊர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும் பல குழுக்கள் கொண்டவர்களாக இருக்கின்றோம். இப்படி சமூகம் பிரிந்து செயற்பட்டால் ஒருபோதும் எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
0 Comments:
Post a Comment