24 May 2017

சட்டத்தை அமுல்படுத்த முடியாத அரசாங்கம் இனவாதத்திற்குப் பணிந்து கைகட்டி நிற்கிறது மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர்

SHARE
சிறுபான்மையினருக்கெதிரான அட்டகாசங்கள் தலை விரித்தாடுகின்றபோது சட்டத்தை அமுல்படுத்த முடியாத அரசாங்கம் இனவாதத்திற்குப் பணிந்து  கைகட்டி நிற்கிறது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை  (22.05.2017) நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

அங்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவரான சுபைர் தொடர்ந்தும் பேசுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் தற்போது ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இனங்களுக்கு மத்தியிலே முறுகலை ஏற்படுத்திக் கொண்டு திரியும் நாசகாரக் கும்பல்களைக் கைது செய்து நாட்டின் உயர் மதிப்பு மிக்க சட்டங்களை அமுல்படுத்த முடியாத கையறு நிலையில் ஆளும் தரப்பு உள்ளது.
இந்த நிலைமை நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் அதியுயர் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி எந்தத் தீர்மானத்தையும் எடுக்காமல் கைகட்டிப் பார்த்திருக்கும் நிலையை சிறுபான்மை மக்கள் ஒரு வித ஆதங்கத்தோடு அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எந்தக் கோணத்தில் இந்த நிலைமையை உற்றுக் கவனித்தாலும் இது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.

நல்லாட்சியின் பங்காளிகள் இந்த விடயத்திலே தவறிழைத்து விட்டதாகவே மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
இந்த அவநம்பிக்கை கலந்த சூழ்நிலை நீடிக்குமானால் எதிர்காலத்தில் இந்த நாடு அழிவுப் பாதையைத் தானாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவே அமையும்.

யுத்தத்திற்குப் பின்னர் எதிர்பார்த்த எந்த நல்ல மாற்றத்திற்கும் நாட்டில் தற்போது மேலெழுந்துள்;ள இனவாதப் போக்கும் அதனை மறைமுகமாக அங்கீகரித்து அகமகிழ்கின்ற ஆட்சியாளர்களின் போக்கும் இந்த நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கே இட்;டுச் செல்லும் என்ற எச்சரிக்கை மணியாகவே மக்களின் அபிப்பிராயம் அமைந்துள்ளது.

ஒட்டு மொத்த நாட்டின் நிலை அவ்வாறிருந்தாலும் பிரதேச ரீதியாக எழுகின்ற இன முறுகல்களைத் தணித்து இன ஒற்றுமைக்கு விதை தூவுகின்ற நல்ல காரியங்களை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

இந்தக் கடமையை அதிகாரிகள் செய்து முடித்தால் குறைந்தபட்சம் அதுவாயினும் ஏக்கப் பெருமூச்சோடும் அச்சத்தோடும் காலங்கழிக்கும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு ஆறுதலாகவும் நம்பிக்கைத் துளியாகவும் இருக்கும்.

பொலிஸாரும் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படுகின்ற இன முறுகல்களை உடனயாக கட்டுக்குள் கொண்டு வருகின்ற கைங்கரியங்களைச் செய்வதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

இன ஐக்கியத்தை வெளிக்காட்டுவதிலும் நடைமுறையில் வாழ்ந்து காட்டுவதிலும் சிறுபான்மை இனங்கள் எப்பொழுதும் போல இனிமேலுள்ள காலங்களிலும் முன்னுதாரணம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.” என்றார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான அலிஸாஹிர் மௌலானா உட்பட அரச கூட்டுத்தாபன, திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ணடனர்.

பிரதேசத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகள் மற்றும் எதிர்காலத்தில் அமுலாக்கவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய அறிமுகமும் அனுமதிகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

SHARE

Author: verified_user

0 Comments: