24 May 2017

ஆட்சியில் தற்போது ஒரு தொய்வு நிலை ஏற்பட்டிருப்பதை மக்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா

SHARE
கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியில் இருந்த சுறுசுறுப்பு தற்போதைய ஆட்சியில் இல்லாமல் நல்லாட்சியில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டிருப்பதை மக்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை  (22.05.2017) நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

அங்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவரான அலிஸாஹிர் மௌலானா தொடர்ந்தும் பேசுகையில்,
அசாங்கத்தின் சுறுசுறுப்பற்ற தன்மையை மக்கள் வெளிப்படுத்துவதையிட்டு அந்த விடயம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனால்தான் இன்று அரச ஆளுகையில் சில மாற்றங்கள்; ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியில் இருந்த சுறுசுறுப்பு, ஆர்வம், ஈடுபாடு எதுவுமின்றி  தற்போதைய ஆட்சியில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டிருப்பதை மக்களும் வெளிப்படுத்துவதைப் போன்று மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கும் சில சமயங்களில் ஒரு அதிருப்தி நிலை ஏற்படுகின்றது.
நான் சாதாரண ஒரு நகரபிதாவாக இருந்து சுறுசுறுப்புடன் முன்னெடுத்துச் சென்ற அபிவிருத்தித் திட்டங்களைக் கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செய்ய முடியாமலிருப்பதையிட்டு மக்களுக்கு வருவதைப் போன்ற இந்த விரக்தி எனக்கும் வருவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நானும் அதனை உணர்கிறேன். நாங்கள் அமைச்சுப் பதவிகளையோ ஏனைய உயர் அந்தஸதுள்ள பதவிகளையோ கேட்டு அடம்பிடிக்கவில்லை. ஆனால் மக்களுக்குத் தேவையான கருமங்களை ஆற்றக் கூடிய அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.

மக்களது எதிர்பார்ப்புக்கள், அவர்களது தேவைகள் பிரச்சினைகள் என்பனவற்றைத் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது.

ஆனால், மக்களுக்கு நிறைவேற்றித் தருவதற்குத் தேவையான சுறுசுறுப்பு ஆர்வம், அக்கறை ஆளும் தரப்பு நிருவாகத்தில் இல்லாதிருப்பது அதிருப்தியளிக்கின்றது.

மந்த கதியியிலே எல்லாம் நடக்கின்றது. அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் இழுத்தடிப்புக்கள் எல்லாம் இருக்கின்ற பொழுது மக்களுக்கு இயல்பாகவே ஏற்படும் அதிருப்தியை குறைகூறவும் முடியது.

நிருவாகக் கருமங்களை ஆற்றும் அதிகாரிகள் நல்லாட்சி என்றவுடன் பயந்து கொண்டு தனக்கு அடுத்ததாக உள்ளவரிடம் பொறுப்பைத் தூக்கிப் போட்டு விடுகின்றார்கள்.

பொறுப்பெடுக்க யாரும் முன்வராததால் அபிவிருத்தித் திட்டங்களில் இழுத்தடிப்புக்கள், தாமதங்கள் ஏற்படுகின்றன. இது மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் அதிருப்தி நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது.
எவ்வாறாயினும் அரசியல் திணிப்பின்றி அதிகாரிகள் தங்களது கடமைகளை உரிய முறைப்படி செய்து முடிக்க வேண்டும்.

அரசாங்கம் கொள்கை ரீதியிலாக எல்லா விடயங்களிலும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: