ஏழு கோடி உலகத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் அழித்த தடயமாக மே 18 வெள்ளைக் கொடி முள்ளிவாய்க்கால் தினமுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் புதன்கிழமை (17.05.2017) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரித்த அவர்,
எப்பொழுது இலங்கையின் இப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, சர்வதேசமும் இலங்கை அரசும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஒத்துக் கொள்கிறதோ அன்றுதான் மே 18- இன் உண்மையான அர்த்தம் உயிரோட்டமானதாக உருப்பெறும்.
மேலும், இது நடைபெறுவதாக இருந்தால் எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ, எப்போது நாங்கள் ஒரு குடையின் கீழ் வேறு கட்சிகள் அமைப்புகள் இன்று எமது மக்களுக்கான உரிமையைப் பெற்றெடுக்கிறோமோ அன்றுதான் எமது தமிழ் மக்களுக்கு உண்மையான மே 18 என்று வெள்ளைக் கொடிவிவகாரம், வெள்ளை முள்ளிவாய்க்காலின் முக்கிய சாட்சியாக அர்த்தப்படும்.
இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை மே 18 அன்றுதான் நடந்தேறியது. எமது உறவுகள் உரிமைக்காகப் போராடிய போது ஏகாதிபத்திய நாடுகளும், சிங்கள ஏகாபத்திய பேரினவாத அரசும் ஒருங்கிணைந்து அழித்த நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை நீத்தவர்கள் எதிரியிடம் சரணடையாமல் மடிந்தார்கள்.
இப்பொழுது மே 18 என்பதை சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது அவமானகரமாகவுள்ளது.
முள்ளிவாய்க்கால் எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாத பல அரசியல்வாதிகள் தங்களது எதிர்கால அரசியலக்காக மாவீரர் நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை நடத்துவது வேதனைக்குரிய விடயம்.
மே மாதம் என்பது கறுப்பு ஜுலைக்கு அடுத்ததாக எமது தமிழ் மக்களுடைய வரலாற்றில் தமிழின அழிப்பு, இன சுத்திகரிப்பு நடந்த ஒரு மாதமாகும். சர்வதேசமே எங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
ஆனால் அந்தக்காலத்தில் தமிழ் பிரதேசங்கள் ஆக்கிரமிப்பின் ஊடாக கொது;துக் கொத்தாக குண்டு மழை பொழியும் போது கைகொட்டிச் சிரித்தவர்கள் வேடிக்கை பார்த்தவர்கள் ஒழித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது போலியான முகத்துடன் தமிழ் இன உணர்வு நிகழ்வுகளை நடத்துவது வேதனைக்குரிய விடயம்.
முள்ளிவாய்க்கால் என்பது வரலாற்றில் இடம்பெற்றதொரு முக்கியமான நிகழ்வு. ஐக்கிய நாடுகள் வரை இக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் பிரிந்து நின்று தனித்தனியாக வேலை செய்வதனால் எந்த விதமான ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் செய்ய முடிவதில்லை.
சரணடைந்தவர்களை ஈவிரக்கமற்று கொன்ற இலங்கை அரசாங்கம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஒரு விடியலைத் தரப்பேவதில்லை.
முள்ளிவாய்க்காலில் நிகழ்வை அந்த மாதத்தில் நடத்துவதனால் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை.
இப்போதும் நித்தமும் முன்னாள் போராளிகள் பலர் தினமும் முள்ளிவாய்க்காலைச் சந்திக்கிறார்கள்.
முன்னாள் போராளிகள், முன்னாள் போராளிக் குடும்பங்கள், பெற்றோர்கள் இல்லாமல் பிள்ளைகள், கணவன்கள் இல்லாதவர்கள். மனைவிகள் இல்லாதவர்கள், தங்களது உறவுகளைத் தொலைத்தவர்கள் ஏங்கித்தவிக்கும் போது அரசியல் மட்டும் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். மே 18 பற்றிப் பேசுவதற்கு அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமே உரிமை இருக்கிறது. அந்த மக்களைக் காப்பாற்ற ஓடி வராத அரசியல்வாதிகள். மக்களுக்காகக் குரல் கொடுக்காதவர்கள். அன்று தங்களை மறைத்து மஹிந்த அரசுக்குப் பயந்து இருந்தவர்கள் இன்று மே 18 பற்றிப் பேசுகிறார்கள்.
எம் இனத்தினை அழித்தவர்களே இன்று எமது பிரதேசங்களுக்கு வந்து மன்னியுங்கள், மறப்போம். நடந்தவற்றை மறப்போம் என்று சொல்வதில் பயனில்லை.
ஆண்டாண்டு காலமாக தமிழன் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் பல்தேசக் கம்பனிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கலாச்சார ரீதியான அழிவுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு விடயத்தினையும் நாங்கள் எடுத்துப்பார்க்க வேண்டியுள்ளது.
சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டியவர்களான நாம் பல தவறுகளைச் செய்தவர்களாக இருக்கின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தினை மாத்திரம் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது.
எங்களது தவறுகளைத் திருத்தி நேர் கோட்டில் பயணித்து ஒருமித்துக் குரல்கொடுக்கின்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். வெறுமனே விளக்கேற்றுவதனால் இழப்புக்களைச் சுமந்த மக்களின் ஆத்ம சாந்தியை அடைந்து விடமுடியாது.

0 Comments:
Post a Comment