5 Mar 2017

கிழக்கு மாகாணத்தில் எல்லா வைத்தியசாலைகளும் முழு நிறைவாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் பாடுபடுகின்றோம் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்

SHARE
கிழக்கு மாகாணத்தில் எல்லா வைத்தியசாலைகளும் முழு நிறைவாக அபி;விருத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் பாடுபடுவதாக
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மற்றும் மகப்பேற்றுப்; பிரிவு கட்டிடத் தொகுதி என்பன திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை 04.03.2017 இரவு இடம்பெற்றபோது அவர் அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்

எல்லா வளங்களும் கொண்டமைந்ததாக ஆதார வைத்தியசாலைகள் மாற வேண்டும்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 24 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் முயற்சியில் மேலும் 138 மில்லியன் ரூபாய் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மூலமாகக் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் தன் அதிகாரங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அதி உச்சமாக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி சுகாதார அமைச்சர் ஆகியோரிடமிருந்து உதவிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்துக்குக் கொண்டு வருகின்றார்.

ஏறாவூர் வைத்தியசாலை இடம்பற்றாக்குறையாக இருப்பதால் இதற்கு நான்கு மாடிக் கட்டிடத்தில் அபிவிருத்தி செய்யத் தீர்மானித்துள்ளோம்.
ஏற்கெனவே ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் வைத்திய வசதிகளைப் பெறுவதோடு மூவினங்களையும் சேர்ந்த வைத்தியர்களும் தாதியர்களும் ஊழியர்களும் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகையினால் இன ஐக்கியத்துக்கான ஒரு கேந்திர இடமாகவும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

முதலமைச்சர் ஏறாவூரை மாத்திரம் அபிவிருத்தி செய்யவில்லை அவர் இந்த முழுக் கிழக்கு மாகாணத்தையும் சுகாதார, கல்வி, பொருளாதாரத் துறையில் அபிவிருத்தி செய்யும் பொறுப்பில் கவனம் எடுத்துச் செயற்பட்டு வருகின்றார்.
கிழக்கு மாகாணத்தில் 110 வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுகிறது. ஆனால் தேவை அதனையும் விட பல மடங்கு உள்ளது.

வைத்தியர்கள் பற்றாக் குறையினால் சில ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்களை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது
கிண்ணியா வைத்தியசாலையில் 500 டெங்கு நோயாளிகள் சமீப ஒரு சில நாட்களில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 4 பேர் மரணித்து விட்டார்கள்.
அதன் காரணமாக பொலொன்னறுவையிலும் வேறு இடங்களிலுமிருந்தும் வைத்தியர்களைக் கொண்டு வந்து சிகிச்சையளித்து வருகின்றோம்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையும் ஏனைய பௌதீக வளக்குறைபாடுகளும் நிலவி வருகின்றன.
அதேவேளை தமது வீட்டுக்கருகில் கடமை புரிவதற்கு வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் விரும்புவதும் ஒரு பின்னடைவாகக் காணப்படுகின்றது.
எல்லாவற்றையும் விட ஊர்மக்கள் தமது பிரதேச வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நலன்கள் பற்றி பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஏழை மக்களுக்கு சிறந்த வைத்திய சேவைகளை வழங்குவதற்கு நாமெல்லோரும் உழைக்க வேண்டும்.

முதலமைச்சர், மாகாண அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் என்றில்லாமல் வைத்தியசாலைகளைப் பயன்படுத்தும் ஊர்மக்கள் அதில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்று பேதம் பார்க்காமல் நாம் எல்லோருமாகச் சேர்ந்து தத்தமது வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: