9 Nov 2016

அரசியல்வாதிகளை ஆரத்தி எடுத்து வரவேற்பதற்கு மாணவர்களைப் பயன்படுத்துவதை இல்லாமல் ஒழிக்கும் தீர்மானத்தை மாகாண சபையில் கொண்டு வர முயற்சிக்கின்றோம் - கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
மாணவர்களை வீதியோரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, கற்றலைத் தடைப்படுத்தி, அரசியல்வாதிகளுக்கு மலர் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து அழைத்து வந்து, பட்டாசு கொழுத்தி, சூழலை மாசுபடுத்தும் இவ்வாறான விடயங்களைத் தடை செய்யும் தீர்மானத்தை மாகாண சபையில் கொண்டு வரும் யோசனை உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதானது… பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகள் விஜயம் செய்யும் பல்வேறு நிகழ்வுகளின்போது பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை வரவேற்பதற்கும், மலர்மாலை அணிவிப்பதற்கும், பட்டாசு கொளுத்துவதற்கும், ஆரத்தி எடுத்து அழைத்து பவனி வருவதற்கும் பயன்படுத்தப் படுகின்றார்கள். 

இது ஒரு கலாச்சாரமாகவே வந்து விட்டது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரில் ஒரு சிலர் இதனை விரும்புகின்ற போதிலும் இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை பல்வேறு தரப்பிலிருந்தும் அறியக் கிடைத்துள்ளது.

மாணவர்கள் மழை வெயில் என்றும் பாராது வீதியோரங்களில் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதால் அவர்கள் மன, உடல்  உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள். அத்துடன் அவர்களது கற்றலுக்கான நேரமும் வீணடிக்கப்படுகின்றது.

இதனைத் தவிர்த்து மாணவர்களின் கற்றலுக்கும் அவர்களது உடல் உள ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிக்காதவாறு பாடசாலையில் நடக்கும் நிகழ்வுகளில் மாணவர்களைப் பயன்படுத்துவதில் கல்விப் புலம் சார்ந்தோர் அக்கறை காட்ட வேண்டும்.

இந்த விடயத்தை மாகாண சபையில் ஒரு தீர்மானமாகக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி சட்டமாக்கி அமுல்படுத்துவதற்கு யோசனை உள்ளது. என்னைப் பொறுத்த வரையில் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் இந்த விடயத்தில் மாணவர், பெற்றோர், ஆசிரியர்கள்;, அதிபர்கள் ஆகியோரின் நன்மை கருதி எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள், வரவேற்பைப் பெறும் ஒரு விடயமாக இது இருக்கும் என நம்புகின்றேன். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறையாக உள்ளார்.

இந்த நடைமுறை கிழக்கு மாகாண சபையில் தீர்மானமாகக் கொண்டு வரப்பட்டு அது முன்னதாக மாகாணத்தில் சட்டமாக அமுல்படுத்தப்பட்டு பின்னர் அது முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சியடைய முடியும். 

SHARE

Author: verified_user

0 Comments: