மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் கீழ்வரும் தியாவட்டவான் நாவலடியில் பொலிஸார் யுத்த காலத்தில் கையகப்படுத்தி சோதனைச் சாவடிக்காகப் பயன்படுத்தி வந்த காணியை பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச் சேவை அலுவலகத்தின் பணிப்புரைக்கமைவாக தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக காணி உரிமையாளர் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தியாவட்டவான் பிரதான வீதியிலுள்ள பியசிறி நந்தபால என்பவருக்குச் சொந்தமான காணியை வாழைச்சேனைப் பொலிஸார் யுத்த காலத்தில் கைப்பற்றியிருந்ததோடு அந்த இடத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியையும் அமைத்திருந்தனர்.
எனினும், யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த இடத்தில் இருந்த பொலிஸ் சோதனைச் சாவடி அகற்றப்பட்டபோதும் பொலிஸார் கைப்பற்றி வைத்திருந்த தனது காணியை கைளிப்பதற்கு பொலிஸார் மறுத்து வந்திருந்த நிலையில் காணி உரிமையாளர் இது விடயமாக ஜனாதிபதி, பிரதம மந்திரி, பொலிஸ் தலைமையகம், பிரதேச செயலாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன் பயனாக பலவருடங்கள் கழிந்து விட்ட நிலையில் பொலிஸார் கையகப்படுத்தியிருந்த காணியை உடனடியாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் தலைமையக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உதவிச் சேவை அலுவலகம் கடந்த செப்டெம்பெர் 24 ஆம் திகதி விடுத்திருந்த பணிப்புரைக் கடிதத்தின் பிரதி 18.10.2016 அன்று காணி உரிமையாளருக்குக் கிடைத்திருந்தது.
சோதனைச் சாவடியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மண் அரண்கள், முள் வேலிகள், இரும்புக் கம்பித் தடைகள் இன்னமும் அந்த வளவில் அகற்றப்படாமல் உள்ளன.
0 Comments:
Post a Comment