இனிமேல் நாங்கள் புரட்டுகின்ற இந்த நாட்டினுடைய அத்தியாயங்கள் எமது சகோதரத்துவத்தை மேம்படுத்துகின்ற அத்தியாயங்களாக இருக்க வேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கடந்த திங்கட் கிழமை (30) திருகோணமலை மொறவெவ மகாதிவுல்வெவ பிரதேச மீனவர் சங்கக் கட்டிடம் திறப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தேசிய அரசாங்கத்தினை மத்தியில் ஆரம்பிப்பதற்கு முன்பே ஆரம்பித்த மாகாணசபையாக கிழக்கு மாகாணசபை இருக்கின்றது. இந்த விடயங்கள் பேச்சுக்கு பெரும் இனிப்பாக இருந்தாலும் இவற்றைச் செயல் வடிவில் இதனை இனிப்பாகக் கொண்டு வருவதுதான் மிகவும் இனிப்பான விடயம் அந்த வகையில் நாங்கள் இதனை செயல் வடிவில் மூன்று இனங்களும் செயலாற்ற வேண்டும் என்ற விதத்தில் மிகப்பெரிய அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றோம்.
நாங்கள் பல்வேறு விதத்தில் ஒரு தாய் மக்களாக இருக்கின்றோம். இதனை நாங்கள் சொல்லுவது. இது வெறுமனே சுவைக்காகச் சொல்ல வில்லை எமது வரலாறுகள் எல்லாம் இதனையே காட்டுகின்றது. விஜயனின் வரலாறு மற்றும் கௌதம புத்தரின் வரலாறும் இதனையே நமக்குக் காட்டுகின்றன.
இந்த நாட்டிற்கு சமஸ்டி ஆட்சிதான் சரியானது என பண்டாரநாயக்கா அவர்கள் ஏற்றுக் கொண்டவர், இந்த நாட்டில் வடக்கு கிழக்கு ஒரு தனித்துவமான இயல்புகொண்ட பிரிவாகவும் நாட்டின் ஏனைய பகுதிகளை நான்காகப் பிரித்து ஐந்து பகுதிகளாக இந்த நாட்டை நிர்வகிப்பதுதான் இந்த நாட்டின் ஒற்றுமைக்கு வழிகோலும் என்று பண்டாரநாயக்கா அவர்கள் தெரிவித்தார். இதனை எமது தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதன் பின்னர் வந்த காலப்பகுதியில் அவரும் ஆட்சியைப் பிடித்துக் கொள்வதற்காக அந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டார்.
அதன் பின்னர் அவரின் மகளான சந்திரிக்கா அம்மையாரும் இது போன்றதொரு வடிவில் நீலன் பீரிஸ் திட்டத்தினை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அதுவும் இருந்த போர்ச்சூழல் காரணமாக ஒப்பேத்த முடியாமல் போய்விட்டது.
இப்போது தமிழ் மக்கள், சிங்கள மக்கள், முஸ்லீம் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்கனவே ஒரு பக்கத்துக்கு மாத்திரம் கொண்டு சென்ற இந்த ஆட்சியை மாற்றி இப்போது மறைந்த எமது எல்லோருக்கும் முன்மாதிரியாக இருந்த மாதுலுவெவ சோபித தேரர் அவர்கள் போன்றோருடைய வழிகாட்டலின் படி நாம் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றோம். அந்த அரசாங்கம் இப்போது தேசிய அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்றது.
அதில் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதிலும் அரசாங்கத்தினுடைய நல்ல செயற்திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்று தெரிவித்திருக்கின்றோம். அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலும் நாங்கள் ஒரு ஆட்சியை அமைத்திருக்கின்றோம்.
இந்த முழு விடயங்களையும் பார்க்கின்ற போது இனிமேல் நாங்கள் புரட்டுகின்ற இந்த நாட்டினுடைய அத்தியாயங்கள் எமது சகோதரத்துவத்தை மேம்படுத்துகின்ற அத்தியாயங்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு நடைபெற்ற துன்பியலான விடயங்களையெல்லாம் மறந்து ஒன்றிணைந்து இது எமது நாடு என்கின்ற ரீதியில் நாங்கள் செயற்பட வேண்டும், வாழ வேண்டும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment