எனது அரசியலை அழித்தொழிக்க எடுக்கும் முயற்சிகள் திரைமறைவில் எனது மண்ணுக்கும் மாவட்டத்துக்கும் செய்யும் துரோகத்தனமாகவே அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மிக சொற்பளவிலான வாக்கு வித்தியாசத்தில் எமது கட்சி ஆசனத்தை இழந்த போதும் என் மீதும் எனது மக்கள் மீதும் கொண்ட நல்லபிப்பிராயமும் நம்பிக்கையும் காரணமாக தேசியப்பட்டியலொன்றை எனக்கு அளிக்க ஜனாதிபதி முன் வந்தமையை ஏற்று எனது மக்கள் சார்பாக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆனால் என் மீது சேறு பூசும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சினைகளையிட்டு கவலையடைகின்றேன். குறித்த பிரச்சினைகளோடு தொடர்புடையவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதித்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் எனது பூரண ஆதரவு இவ்விடயத்தில் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.
எனவே,மாற்று அரசியல் செய்யும் சகோதரர்கள் மக்களையும் எமது மண்ணையும் பிழையானவர்களாக தேசியத்தில் காட்டாமல் எமது இலட்சியவாத அரசியல் பயணத்தில் பங்கெடுத்து எமது பிரதேச அபிவிருத்திக்கும் நல்லாட்சிக்கும் கைகோர்க்க அழைப்பு விடுக்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment