மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலிலும் செய்து வருகின்றேன் என்று வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வும், உயர் வகுப்பு மாணவர்களுக்கான சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டம் வறுமை கூடிய மாவட்டமாகவும், போதைப் பாவனையாளர்கள் அதிகமாகவுள்ள மாவட்டமாகவும் இருப்பது மிகவும் கவலைக்குறிய விடயமாகும். போதைப் பொருள் பாவனை அதிகம் இருப்பதானால் தான் வறுமை அதிகரித்துக் காணப்படுகின்றது.
போதைப் பொருள் பாவனை அதிகம் என்பதே வறுமைக்கு ஒரு காரணம் உழைப்பு இல்லாமல் அல்லது கிடைக்கின்ற சிறிய உழைப்பைக் கொண்டு கூடியளவு போதைப் பாவனைக்காக செலவு செய்கின்றமையே இதற்கு காரணமாகும். மாவட்டத்தில் இருந்து போதைப் பொருள் பாவனையையும் வறுமையையும் இல்லாமல் செய்வதற்கு மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும் அப்போது தான் அதில் வெற்றி கிடைக்கும் என்றார்.
வாகரை பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில் வாகரை மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்னம், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கடன் தொகைக்கான பணத்தினையும், உயர்வகுப்பு மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பரிசில் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நாட்பது (40) திவிநெகும பயனாளிகளுக்கு இருபது லட்சம் ரூபாவும், உயர்வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் இருபத்தி இரண்டு மாதத்திற்கான பணமாக ஒவ்வொரு மாணவருக்கும் இருபத்திரெண்டாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டதாகவும் வாகரை பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment