23 May 2015

ஒற்றையாட்சியை மாற்றக் கூடிய அளவிற்கு தற்போதைய நிலையில் நல்ல சகுணங்கள் இருக்கின்றது - கிழக்கு அமைச்சர் துரைராஜசிங்கம

SHARE

இந்த நாட்டில் ஒற்றையாட்சியை மாற்றக் கூடிய அளவிற்கு மத்திய அரசில் நல்ல சகுணங்கள் இருக்கின்றது. இவ்வாறு எம்முடன் சேர்ந்து சிந்திக்கக் கூடிய ஆதரவுகளையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமை மாலை (19) மட்டக்களப்பு பழுகாமம், கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்…

எமது மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கோடுதான் இந்த மாகாண சபை அதிகாரங்களை நாங்கள் பெற்றோம் நாம் தற்போது இருக்கின்ற ஜதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் பெரும்பாண்மை இனத்துடனும், எமது சகோதர இனத்துடனும் சேர்ந்துதான் வாழ வேண்டும் என்ற ஜதார்த்த நிலை இருக்கின்றது. இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். சண்டையிடுவதை விட சமாதானத்தை ஏற்படுத்து வதற்காகவே அதிகம் போராட வேண்டும்.

தற்போதைய நிலையில் நமக்கு விடியல் ஏற்பட்டதாக இல்லை. தற்போதுதான் கிழக்கு வெளித்து வந்திருக்கின்றது. இந்த வெளிப்பை வைத்து நாம் விடியலைத் தேடி அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.
தற்போது ஒரு உறுதிப்பாடு இல்லாத மத்திய அரசு இருந்து கொண்டிருக்கின்றது. அப்படி இருக்கையில் நாமும் இந்த அரசிற்குள் இல்லாமல் அரசின் வெளியில் பிரதான சபையினுள் இருக்கின்றோம். அதனை வைத்துக் கொண்டு நாம் பல விடயங்களைச் செய்திருக்கின்றோம்.

ஆனால் பலர் இந்த நூறு நாட்களுக்குள் எமக்கு என்ன நடந்திருக்கின்றது என உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால் நமக்குத் தெரியும் ஒரு மாற்றம் மக்களின் வாழ்வியல் ரீதியில் ஏற்பட்டுள்ளதை நாம் உணர முடிகின்றது. இந்நிலையில் ஒரு உறுதியான அரசு வரும் பட்சத்தில் அதில் நாம் பங்குதாரர்களாக இருந்து செயற்பட சாத்தியக் கூறுகள் வரும். நாம் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் தற்போது உள்ளது போல் தேசிய அரசாங்கம் ஏற்பட்டால் மாத்திரமே எங்களுடைய இலக்கை நோக்கி நாம் செல்ல முடியும்.

எனவே அடுத்த கட்டம் சம்மந்தமாக நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய மாற்றத்தின் பின் எமக்கு ஒரு உறுதிப்பாடு வந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்களுடைய கைங்கரியத்தினை காட்ட வேண்டும்.

கடந்த காலங்களில் எமது இளைஞர்கள் நெருப்பில் நீந்தி செய்ய வேண்டும் என நினைத்த விடயத்தினை நாம் அமைதியாக ஒரு புள்ளடியில் சாதித்திருக்கின்றோம். எமது இளைஞர்களின் சாதனை அளப்பரியது. அவர்கள் இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்திருப்பது என்பது மிகப்பெரிய விடயம். அது யாராலும் வர்ணனை செய்ய முடியாத தியாகம்.

எனவே தற்போது மிகவும் நிதானமாக எமது அடியை எடுத்து iவைக்கும் காலம். இருக்கின்ற சந்தர்ப்பத்தை கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எம்மால் பெறக்கூடிய கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று மத்திய அரசில் எமது உறுதியை வெளிப்படுத்த வேண்டும்.

தற்போது ஒரு அணி எம் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றது. எமது வரலாற்றில் எப்போதும் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களே அவர்கள். அது எமது மக்களுக்கும் நன்கு தெரியும். எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் ஏனெனில் எமது வாக்குகள் மிகப்பெரிய பலம்.

இனிமேல் வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் எமது மக்கள் செயற்பட வேண்டும். சர்வதேச இராஜதந்திர நாடுகள் எமக்கு அங்கீகாரம் கொடுப்பதாக இருந்தால் எமது மக்கள் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை மாத்திரம் தான் தெரிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியை நாம் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் எமது இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளும் வெற்றிபெறும்.

இவ்வாறான நிலை ஏற்படும் போது மட்டும் தான் நாம் ஒற்றை ஆட்சியை விலக்கிய ஒரு ஆட்சியை உருவாக்க முடியும். அந்த அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தின் பின்னர்தான் எங்களுக்கு என்ற உள்ள சுயநிர்ணய உரிமையைப் பெற முடியும். இதன் மூலம் எமது நிதிகளை நாங்களே கையாளக் கூடியதாக இருக்கும்.

இவையெல்லாம் நடக்குமா? நடக்குமா? என்று இருந்த காலம் போய் இப்போது நடக்கும்! என்று ஓரளவு நம்பக் கூடிய காலம் மாறியுள்ளது. எனவே இந்த ஒற்றையாட்சியை மாற்றக் கூடிய அளவிற்கு மத்திய அரசில் நல்ல சகுணங்கள் இருக்கின்றது. இவ்வாறு எம்முடன் சேர்ந்து சிந்திக்கக் கூடிய ஆதரவுகளையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்கு எமது மக்களின் பூரண செயற்பாடுகள் பக்கபலமாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: