நாங்கள் எதிர்பார்த்திருந்த பொறுப்பு
கூறல் விடயத்திலே திருப்தி இல்லை – சாணக்கியன் எம்.பி கவலை.
இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும்கூட நாங்கள் எதிர்பார்த்திருந்த அந்தப் பொறுப்பு கூறல் விடயத்திலே திருப்தி அடையக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்பதை நான் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் திங்கட்கிழமை (18.05.2026) காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் பத்ததேவுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, காய்சி சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், போரதீவுபற்று பிரதேச சபையின் உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
மே மாதம் 18 ஆம் திகதி தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாகும். இன்றைய மே 18 ஆம் தேதி வடக்கு கிழக்கு மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் இணைந்து பேசப்படும் எமது இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்து எமது விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாள் ஒன்றாகும்.
17 ஆண்டுகள் கடந்தும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாக குருமண்வெளழி மண்ணிலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் பத்ததேவுவின் ஏற்பாட்டில் நாம் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அந்த மரணித்த மக்களை நினைவு கூர்ந்து இருக்கின்றோம்.
17 ஆண்டுகள் கடந்தும் மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே குறிப்பாக கொல்லப்பட்ட, அழிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை.
இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும்கூட நாங்கள் எதிர்பார்த்திருந்த அந்தப் பொறுப்பு கூறல் விடயத்திலே திருப்தி அடையக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்பதை நான் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எது எவ்வாறு அமைந்தாலும் நிச்சயமாக தமிழ்
மக்களுக்கு குறிப்பாக கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி இறைவனுடைய தீர்ப்பிலே இருந்து எவருமே
தப்ப முடியாது. நாங்கள் தமிழரசு கட்சி மக்களுக்காக, கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும்
எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை என்பதை இந்த துக்கமான தினத்தில் குருமன்வெளி
மண்ணிலிருந்து நான் தெரிவிக்கின்றேன். என அவர்
இதன்போது தெரிவித்துள்ளார்.




0 Comments:
Post a Comment