27 Jun 2024

மட்டக்களப்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

SHARE

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடிப் பகுயில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர் புதன்கிழமை(26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக ஆலயங்களின் புனரமைப்புக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மிகவும் குறைவான தொகையாகவே காணப்படுகின்றன. இலங்கையில் இந்து காலாசாரத்திற்கென ஒரு அமைச்சு இல்லாத நிலைதான் காணப்படுகின்றது. ஆனால் பௌத்த மதம் உள்ளிட்ட ஏனையவற்றிக்கு அமைச்சுக்கள் உள்ளன. எனவே இந்து கலாசார அமைச்சை ஒரு திணைக்களமாக மாற்றி வைத்திருக்கின்றார்கள். மாவட்டத்திலே சைவ சமய வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக உள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மிகவும் குறைவாகதாகவே காணப்படுகின்றது.

மட்டக்களக்களப்பு மாவட்டத்தின் வடமுனை, குடும்பி மலைப் போன்ற எல்லைப்புறப் கிராமங்களிலே விகாரைகள் அமைக்கும் பணிகள் மிகவும் ஆடம்பரமாக இடம்பெற்று வருகின்றன. ஊத்துச் சேனை, வடமுனை, குடும்பிமலை ஆகிய பகுதியில் அமைந்துள்ள நெல்கல்மலை எனும் இடத்திலே இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அங்கு புதிய விகாரை ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பில் சுமார் இரண்டு வருடங்களாக பிரதேச மட்டம், மற்றும் மாவட்ட மட்ட கூட்டங்களின்போது ஒரு சிங்கள குடிமகன் வாழாத பிரதேசத்தில் அங்கு விகாரை அமைப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது என்று கேள்வி எழுப்பியபோது இம்மாவட்டத்திலே இருக்கின்ற அரசாங்கத்தின் கைக்கூலிகள் இதனை பேசுபொருளாக அல்லது ஒரு தீர்மானமாக எடுத்து அனுப்புவதற்கு மறுத்த காரணத்தினால் கோடிக்கணக்கான செலவில் அங்கு விகாரை அமைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.

ஆனால் எமது ஆலயங்களுக்கு சிறிதளவு நிதி வசதிகளை ஒதுக்கீடு செய்து எமது கலாசாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கும் போது அரசியுடைய பினாமிகள் இவ்விடையத்தை புறந்தள்ளுகின்றார்கள்.

விகாரை அமைக்கப்பட்டால் அதனைப் பராமரிப்பதற்கு பிக்கு வரவேண்டும், பின்னர் பிக்குவுக்கு உணவு வழங்குவதற்கு இன்னும் சிங்கள் மக்கள் வரவேண்டும். அவ்வாறே பெரும்பான்மை சமூகத்தின் குடியேற்றத்திட்டமாக அப்பிரதேசம் மாறிவிடும்.

அதுபோன்று மாவட்டத்தில் பல வீதிகள் புனரமைப்புச் செய்யவேண்டியுள்ளன. ஆனால் பல மில்லியன் செலவில் காட்டுப் பகுதி ஊடாக இந்த நெல்கல்மலைக்குச் செல்வதற்காக அம்பாறையிலிருந்து வீதி அமைக்கப்படுகின்றது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து மட்டக்களபப்புக்குத் தேவையான வீதிகளைப் புனரமைக்காமல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதுதான் நாட்டினுடைய நிலமை.

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வந்தால் அவருக்கு உணவு வழங்கினால் அமைச்சுப் பதவி எடுக்கக் கூடிய அளவிற்கு நிலமை வந்துள்ளது. இந்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தெற்கினுடைய, அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே இவர்களுக்கு விசேடமான நிதி, இலஞசம் கிடைப்பதாகவும் நாம் அறிகின்றோம். இதனை மக்கள் நன்கு அறிந்து, இம்மாவட்டம் தொடர்ந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாக இருக்க வேண்டும் என நாம் நினைத்தால் மக்கள் எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 











SHARE

Author: verified_user

0 Comments: