30 Sept 2018

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 935 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம் - மஹிந்த அமரவீர

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 935 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை தீரப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு என்னிடம் அதிமேதகு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நவீன மயமாக்கல் விவசாயத்திட்டத்தின் கீழ்  தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டக்களப்பு களுதாவளை கிராமத்தில்  அதன் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (29) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சதீஸ்காந் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர், அங்கஜன் இராமநாதன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்து கொண்டனர் அங்கு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…. 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 935 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இறுக்குமதிகளைக் குறைத்து ஏற்றுமதிகளை கூட்டுவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதாகும்.

கடலை அண்மித்த பிரதேசத்தில் விவசாயம் மேற்கொள்வது எனக்கு புதியதாகவுள்ளது. நான் உங்களிடத்தில் இருந்து அதிகமான வெங்காய உற்பத்தியும் மிளகாய் உற்பத்தியை நாங்கள் கூடுதலாக எதிர்பார்க்கின்றோம். நாங்கள் கடந்த காலத்தில் பச்சமிளகாயை 9030 மில்லியன் ரூபாய்க்கு இறக்குமதி செய்துள்ளோம். அதேபோன்று முந்திரியம் பருப்பு இறக்குமதிக்காக 630 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளோம்.

இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் விவசாயத்தினை கட்டியெழுப்புவதற்காக கூடுதலான நிதியினை வழங்கிக் கொண்டு இருக்கின்றார். உண்மையில் சொல்லப்போனால் இந்த நாட்டிலே இதுவரைகாலத்திற்கும் விவசாயத்துறைக்கு கூடுதலான நிதியினை அள்ளியிறைத்த ஜனாதிபதியென்றால் அது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையே சாரும் என்பதனை இவ்விடத்தில் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் அண்மையில் விவசாயிகளின் நன்மைகருதி அவர்களுக்காக காப்புறுதித்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளோம். இதன் ஊடாக நெற்செய்கை, மிளகாய் செய்கை, போன்ற பல செய்கைகளின்போது அது அழிவடைந்தால் நீங்கள் காப்புறுதியைப்பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 525 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற டொலரினையுடைய ஏற்றத்தினை குறைப்பதற்கு விவசாய நாடவடிக்கைகளை கூட்டுவதன் ஊடாக இதனை சீர்செய்ய முடியுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டில் விவசாயிகள் படுகின்ற துன்பங்கள், கஸ்ரங்கள் அனைத்தையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். இந்த நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்த்தில் விவசாயிகளினுடைய பிரச்சினைகளை தீரப்பதற்குரிய அனைத்து நடவடிகைக்கைகளையும் எடுக்கும்படி எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதன்  அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என இதன்போது அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: