மட்டக்களப்பு - மாவட்ட செயலகம், போரதீவு பற்று பிரதேச செயலகம் மற்றும் போரதீவுப் பற்று பிரதேச சபையினது வழிகாட்டலுடனும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளி கிராம சேவகர் பிரிவினில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்ட குளம் ஞாயிற்றுக்கிழமை (30) மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் அனர்த்த அபாயக் குறைப்புத் திட்டத்தின் கீழ் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினரல் வழங்கப்பட்ட நிதி அணுசரணையுடனும், புனரமைக்கப்பட்ட இக் குளத்தின் ஊடாக 286 குடும்பங்கள் தங்கள் நாளாந்த நீருக்கான தேவைப்பாடுகளையும், வாழ்வாதாரத்திற்கான தேவைகளையும் நிறைவேற்றவுள்ளனர்.
இக்குளத்திற்கான புனரமைப்புச் செலவாக பாம் நிறுனமானது ரூபாய். 675,870.00ம், மக்களின் பங்களிப்பாக ரூபாய் 349717.00ம் கொண்டதாகும்.
இன்றைய இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி மாவட்ட செலயக உதவித் திட்மிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.றியாஸ், உதவித் திட்மிடல் பணிப்பாளர் கே.சசிகுமார் மற்றும் ஏனைய அரச திணைக்கள அதிகாரிகள் பாம் பவுண்டேசன் நிறுனத் திட்ட முகாமையாளர் அருள்சக்தி, மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பாம் பவுண்டேசன் நிறுவனமானது மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை வெள்ளம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட 12,389 குடும்பங்களுக்கும், 46 பாடசாலைகளுக்கும் சுத்தமானகுடி நீரிணைப்பினை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் இணைந்து வழங்கியுள்ளது.
வடிகான்களை சுத்தப்படுத்தலினூடாக மாவட்டத்திற்கான அனர்த்தத்தைக் குறைத்தல், மரம் மீள் நடுகை, கிராம மட்டத்திலான அனர்த்த அபாயக் குழுக்களை வலுப்படுத்துதல் மற்றும் குளங்களைப் புனரமைத்தல் போன்ற அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






0 Comments:
Post a Comment