விதவைக் குடும்பங்களின் நிலைமை சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும் என்ற அவசியம் உணரப்பட்டுள்ளதால் ஒவ்வொரு விதவைக் குடும்பத்திற்கும் குடும்பத்திற்கு மாதாந்த ஜீவனோபாயத்திற்கான உலருணவுப் பொதி விநியோகிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஹாபிஸ் நஸீர் பௌண்டேஷன் அறக்கட்டளை மூலம் இந்த உதவு ஊக்க உலருணவு விநியோகம் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை 13.09.2018 கருத்துத் தெரிவித்த மாகாண முன்னாள் முதலமைச்சர், விதவைகளுக்கான மாதாந்த உலருணவுப் பொதி வழங்கும் செயற்திட்டம் முதற் கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை 17.09.2018 ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தங்களுக்கு உதவிக்கான வேண்டுகோள் விடுத்து ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இதுவரை சுமார் 2500 இற்கு மேற்பட்ட விதவைக் குடும்பங்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளன.
ஆய்வினடிப்படையில் இக்குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாடுவதும் தங்களது குடும்பத்திலுள்ள பாடசாலைக்குச் செல்லும் சிறார்களை படிப்பிக்க முடியாமல் திண்டாடுவதும் தெரியவந்துள்ளது.
பிரதான உழைப்பாளியை இழந்திருப்பதன் காரணமாக பொருளாதார நிலையில் இக்குடும்பங்கள் நலிவடைந்திருப்பதால் அவர்களது நாளாந்த ஜீவனோபாயம் மிகவும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது.
இதனை சீர் செய்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டிய சமூகப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
முதற்கட்டமாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கும் இந்த விதவைக் குடும்பங்களுக்கான மாதாந்த உதவு ஊக்க உலருணவு விநியோகம் ஏனைய பகுதிகளுக்கும் காலப்போக்கில் விஸ்தரிக்கப்படும் என்றார்.
நாட்டில் சில காலம் இடம்பெற்ற ஆயுதப் போர் காரணமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் விதவைகளாக்கப்டோர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐநா மனித உரிமை ஆணையர் செய்த் ராப் அல் ஹ{ஸைனிடம் தான் முதலமைச்சராக இருந்தபோது வலியுறுத்தியிருந்ததையும் நஸீர் அஹமட் இவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்.

0 Comments:
Post a Comment