நாட்டுக்காக முதலாவது உயிர் நீத்தவர் ஒரு முஸ்லிம் இதனை இந்த நாட்டை உரிமை கொண்டாடும் பெரும்பான்மை மறந்து விடக் கூடாது
ஏறாவூர் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித்
நாட்டுக்காக முதலாவது உயிர் நீத்தவர் ஒரு முஸ்லிம் என்பதனை இந்த நாடு தங்களடையதுதான் என உரிமை கொண்டாடும் பெரும்பான்மை சமூகம் மறந்து விடக் கூடாது என ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத் தலைவரும் தாழங்குடா கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல்வாஜித் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சந்தரும் சூழ்நிலை தொடர்பாக வன்முறைகளைத் தடுக்கும் விதத்தில் பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து பணியாற்றுவது குறித்த கலந்துரையாடல் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் மற்றும் சம்மேளன உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை 07.03.2018 இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அப்துல் வாஜித், இந்த நாட்டில் சகலரும் சகவாழ்வு வாழ்வதற்கு ஒவ்வொரு பிரஜையினதும் மனித உரிமைகள், மத உரிமைகள், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
சட்டமும் ஒழுங்கும் இன மத மொழி பேதம் பார்க்காது சகலரும் ஒரே சமம் என்ற கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டும்.
குற்றவாளிகளின் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதற்காக பொலிஸாருடன் இணைந்து முழு ஒத்துழைப்பு வழங்க ஏறாவூர்ப் பொதுமக்களும் பொது அமைப்புக்களும் தயாராக இருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் பல்வேறு வன்முறைகள் முஸ்லிகளுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இந்த நாட்டின் சுதந்திரம், பாதுகாப்பு, அபிவிருத்தி, பொருளாதாரம் என்பனவற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்து வந்துள்ளது என்பதை நாடு முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் பாதுகாப்புக்காக முதன் துமலாக உயர் நீத்தவர் ஒரு முஸ்லிம் என்பதை நாடு நன்றியுணர்வோடு புரிந்து கொண்டு அந்த சமூகத்தைப் பராமரிக்க வேண்டும்.
இந்த நாட்டை சர்வதேச மயப்படுத்துவதில் இலங்கை முஸ்லிம்கள் ஆக்கபூர்வமான பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கி குளிர்காய்வதற்கு அந்நிய சர்வதேச சக்திகள் நிகழ்ச்சி நிரல் வகுத்துள்ளதன் வெளிப்பாடுகளே தற்போது பரவி வரும் வன்முறைகளாகும்.
இதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.
இச்சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குழுவினர் வலியுறுத்தினர்.
0 Comments:
Post a Comment