8 Mar 2018

மீள் குடியேற்ற அதிகார சபையின் தலைவர் என். பத்மநாதனின் மறைவுக்கு மட்டக்களப்புமாவட்ட சிவில் சமூக அமைப்பு இரங்கல்

SHARE
புத்தி ஜீவியான மீள் குடியேற்ற அதிகார சபையின் தலைவர் என். பத்மநாதனின் மறைவு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் முழு நாட்டிற்கும் ஒரு பேரிழப்பாகும் என மட்டக்களப்புமாவட்ட  சிவில் சமூக அமைப்பு புதன்கிழமை 07.03.2018 இரங்கல் வெளியிட்டுள்ளது.
மறைந்த பத்மநாதனின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை கல்கிசையில் இடம்பெற்றபோது இந்த இரங்கல் செய்தி மட்டக்களப்பு மாவட்ட  சிவில் சமூக அமைப்பின் தலைவர் சித்திரப்போடி மாமாங்கராஜா அவர்களால் வெளியிடப்பட்டது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சிவில் சேவையாளராக தனது பணியைத் துவங்கிய பத்மநாதன் அவர்கள் புத்திஜீவி என்ற உயர் ஸ்தானத்தை எட்டிப் பிடித்து திறைசேரியின் உதவிச் செயலாளர், சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், ஐநா அமைப்பின் ஹெபிடாட் நிறுவன அதிகாரி என இதுபோன்று இன்னும் பல பொது அமைப்புக்களின்  முக்கிய பதவிகளையும் வகித்து அவர் பொதுத் தொண்டாற்றி மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டுக்கே பெருஞ் சேவை செய்தார்.

அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழக கவுன்ஸிலில் மூன்று முறை தொடர்ச்சியாக உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக சமூகத்திற்கும் சேவையாற்றினார்.

உள்நாட்டுக் குழப்பம் ஒரு கட்டத்தில் அவரையும் சிறையில் வாடச் செய்தது, எனினும் அவரது நேர்மை காரணமாக மனம் தளராது மீண்டெழுந்து வந்து மனம் சலிக்காது தொடர்ச்சியாக சேவையாற்றினார்.

அத்தகையதொரு புத்தி ஜீவியை நாம் இழந்து நிற்கின்றோம்.

அவர் விட்டுச் சென்ற புலமைப் பாதையை எதிர்கால சந்ததி தொடர வேண்டும்.” என்று அந்த இரங்கற் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இறப்பெய்திய என். பத்மநாதன் (வயது 70) இறுதிக் கிரியைகள்  புதன்கிழமை கல்கிசை மயானத்தில் இடம்பெற்றன.

SHARE

Author: verified_user

0 Comments: