நெல்லிற்கான நியாயமான விலை கிடைக்காமையினால் விவசாயிகள் பெரும் நஷ்ட்டத்தை எதிர்நோக்கி நேரிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். விதைப்புக் காலத்தில் ஒரு மூடை நெல் 3000 ரூபா தொடக்கம் 3500 ரூபா வரைக்கும் பணம் கொடுத்து கொள்வனவு செய்து விதைத்துள்ள போதிலும் தற்போதைய அறுவடைக்காலத்தில் ஒரு மூடை நெல் 2000 ரூபாவுக்குள்தான் விற்பனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அறுவடை செய்யும் நெல்லை நியாயமான விலைக்கு விற்பனைசெய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இரந்த ஆட்சிக்காலத்தில் ஒரு அந்தர் பசளை 350 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு ஏக்கருக்கு 5000 ரூபா பணம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு அந்தர் பசளை 2000 ரூபா தொடக்கம் 3000 ரூபா வரைக்கம் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாவிற்கு போதியளவு பசளையைக் விவசாயிகள் கொள்வனவு செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் அதிக செலவுகளையும், முதலீடுகளையும் இட்டு வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுவரும் இந்நிலையில் அறுவடைக்கூலி, கிருமிநாசினி, களைநாசினி, பசளை கொள்வனவு உள்ளிட்ட ஏனைய இதர செலவுகளையும் வைத்துக் கொண்டு அறுவடை செய்யும் நெல்லிற்கான உத்தரவாத விலை இன்மையினால் வெளி இடங்களிலிருந்து வரும் நெல் வியாபாரிகள் 2000 ரூபாவிற்கு குறைந்த விலையில் மதம்மிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர். இவற்றால், பாரிய நஷ்ட்டத்திற்குட்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே நெல்லிற்கான உத்தரவாத விலையை அரசு நிருணயித்து அரசாங்கமே தகுந்த விலையில் தமது நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுகின்றனர்.
0 Comments:
Post a Comment