ஏறாவூர் பிரதேசத்தின் 30 வருட கால ஏமாற்று அரசியலுக்கு மாற்றீடான எனது அரசியல் பிரவேசம் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு இரண்டரை வருட காலத்தில் சிறந்த பலனைத் தந்துள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவருமான செய்னுலாப்தின் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை 04.02.2018 இடம்பெற்ற ஏறாவூர் நகரசபையைக் கைப்பற்றும் வியூகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சோரம்போய் விட்டதாக கொக்கரித்துத் திரிகின்றனர்.
ஆனால், உண்மை அதுவல்ல, நடைபெறப் போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சுமார் 70 வீதத்திற்கு மேலான உள்ளுராட்சி மன்றங்களை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும் என்பதோடு அதற்கடுத்து வரப்போகின்ற மாகாண சபைத் தேர்தலிலும் அதன் பின்னரான பொதுத் தேர்தலிலும் அக்கட்சியே கோலோச்சப் போகின்றது. அப்போது நாம் அந்த ஆட்சியில் இருப்போம்.
இந்த அரசியல் வியூகங்களை நாடி பிடித்தறிந்துதான் நாம் ஆட்சியின் பங்காளர்களாக வருவதற்கு ஐதேகவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோம்.
இந்த அரசியல் சாணக்கியத்தையும் யதார்த்தத்தையும் அறிந்து கொள்ள முடியாத வெற்றுப் பாத்திரங்கள் சத்தமிடுகின்றன.
இதனையிட்டு மக்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையில்லை.
ஸ்ரீலமுகா வின் இதயமாக இருக்கின்ற பகுதிகளிலும் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அதன் வரலாறு நெடுகிலும் அதன் தனித்துவத்தை இழக்கவில்லை. சமகால நகர்வுகளின் போக்கை நாடி பிடித்தறிந்து சமயோசிதமான சிந்தனை மூலம் அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பல அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வந்திருக்கின்றது.
இத்தகைய ஒரு அரசியல் ஞானத்தோடு எமது ஸ்தாபகத் தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்கள் அதன் சமூகப் போராளிகளை வழிநடாத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை அதன் கடந்த கால வரலாறுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
அரசியல் ரீதியான வியூகங்களில் நாம் ஒருபோதும் தோற்றுப்போனதில்லை.
அரசியல் வியூகம் அமைப்பதில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.
அவரது ஆளுமை மிக்க தலைமைத்துவத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எதிர்க்கட்சி ஆளும் கட்சி எல்லோரது காலத்திலும் நாம் சரியான வியூகங்களை வகுத்து அரசியல் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கின்றோம்.
கடந்த 30 வருட காலம் இவ்வூர் மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை நடாத்திக் கொண்டு தான் மக்களுடன் மக்களாக இருந்து குடிசையில் வாழ ஆசைப்படவதாகக் கூறிக் கொள்ளும் பிரதேச அரசியல்வாதியின் பசப்பு வார்த்தைகளில் மக்கள் இனி மயங்கமாட்டார்கள்.
நாம் ஒவ்வொரு அபிவிருத்தியாக மக்களுக்கு என்ன தேவை என்பதை ஆய்வின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்திருக்கின்றோம். எதிர்காலத்திலும் இது தொடரும்” என்றார்.
0 Comments:
Post a Comment