மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் 2017ம் ஆண்டில் சிறு குற்றமிழைத்த 278 பேர் சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடைமை புரியும் சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் கனகசபை சுதர்ஷன் தெரிவித்தார்.
மேலும் அவர் ஞாயிற்றுக்கிழமை 04.02.2018 தெரிவிக்கையில் சிறு குற்றமிழைத்த இவர்களுள் 268 ஆண்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களில் 78 பேர் சட்டவிரோத மதுவிற்பனையிலும் 150 பேர் மதுபோதையில் பொது மக்களுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த குற்றச் சாட்டிலும் 24 பேர் தம்வசம் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததாலும் 06 பேர் சட்ட விரோதமாக சூதாடிய குற்றத்திலும் 02 பேர்; தம்வசம் சட்டவிரோதமாக ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திலும் 18 பேர் திருட்டு போன்ற ஏனைய குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்களாவர்.
இவ்வாறானவர்கள் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாதிருக்கவும் தங்களை சீர்திருத்திக் கொள்ளவும் பொருத்தமான ஆலோசனைகளும் வழிகாட்டல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனி உளவள ஆலோசனை, குடும்ப உளவள ஆலோசனை, குழு உளவள ஆலோசனை ஆன்மீக ரீதியான நல்வழிப்படுத்தல் (தியானம், ஜெபம், பயான்) போதைப் பாவனையும் அதன் பாதிப்பு தொடர்பான பரவலான விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்தல், சிறு தொழிற் பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல் (காகித உறை, மெழுகுதிரி, வீட்டுத் தோட்டம்) மருத்துவ சிகிச்சை தேவையானோருக்கான வசதிகளை பெற்றுக் கொடுத்தல், போதைப்பாவணைக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் போன்ற ஆக்கபூர்வமான சமுதாய சீர்திருத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2017ல் விமோச்சனா புனர்வாழ்வு நிலையத்தினூடாக சுமார் 63 பேர் மதுபோதை புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
சமுதாய சீர்திருத்த கட்டளைக்குட்படுத்தப் பட்டோரில் அநேகமானோர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாதிருப்பதும் படிப்படியாக மதுபாவனை குறைவடைந்து வருவதும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களமானது 1999ம் ஆண்டின் 46ம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தசட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு 1999 டிசெம்பர் 10ல் அத்தாட்சிப் படுத்தப் பட்டு இலங்கையில் சகல நீதவான் நீதிமன்றங்களினூடாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் சிறப்பான திட்ட முன்னெடுப்பிற்கு போதைப்பொருள் பாவனைக்கெதிராக செயற்படும் சகல சமூக நலன்சார் அமைப்புக்களினதும் ஏனைய அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் ஒத்துழைப்புக்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும்
சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர், பிராந்திய காரியாலயம், நீதவான் நீதிமன்றம்,
மட்டக்களப்பு. தொ.பே.இல 065-2228496
0 Comments:
Post a Comment