8 Jan 2018

முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும்! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சூளுரை

SHARE
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அரசியல் போராட்டத்தினை முழுத் தேசியத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு தலைமை தாங்குகின்ற மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
இதேவேளை, முஸ்லிம்கள் நாட்டின் எந்தவொரு மூலையில் வசித்தாலும் அவர்களுக்கு பிரச்சினையொன்டு ஏற்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்பி உதவி செய்யும் முதலாவது பிரதேசமாகவும் காத்தான்குடி மாநகரம் கட்டியெழுப்பப்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்த்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது….

30 வருட கால போரில் எமக்குக் கிடைத்த அனுபவம், கடந்த 10 வருடங்களாக எமக்குக் கிடைத்துள்ள வெளிநாட்டுத் தொடர்புகள், அரசியல் அனுபவங்கள் என்பற்றை அடிப்படையாக வைத்து காத்தான்குடி மாநகரை மாற்றியமைத்து புது யுகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானித்துள்ளோம். அதற்கான திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம். 

இந்தத் தேர்தலில் நாங்கள் அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளோம். புரிந்துணர்வுடனான அரசியல் கலாசாராத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். எனது வேட்பாளர்கள் யாரும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏதேனும் தவறான கருத்து முன்வைக்கப்பட்டால் அடுத்த மேடையிலேயே அதனை சரி செய்ய வேண்டும். எல்லை மீறி செயற்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 

நாங்கள் எது செய்ய சென்றாலும் அதற்கு எதிர்ப்புக்கள் வரும். எதிர்ப்புக்கள் வரும் என்பதற்காக அதற்கு அஞ்சி சமூகத்தின், பிரதேசத்தின் நலனுக்கான நடவடிக்கைகளை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். கடந்த தேர்தலில் நான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளன் என்று கூறி எனக்கு எதிராக பிரசாரங்களை முடுக்கி விட்டு என்னை தோற்கடித்தனர். அதற்காக நான் எவர் மீதும் கோபம் கொள்ளவில்லை. 27ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நான் 55 வாக்குகளால் தோல்வியடைந்தது அல்லாஹ்வின் நாட்டமே. நான் மஹிந்தவின் ஆதரவாளர் இல்லை. மைத்திரியின் ஆதரவாளன் என்பது நான் தோற்றதாலேயே நிரூபிக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்து தேசியப்பட்டியல் வழங்கி அதற்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கியதால் எனக்கு எதிரான விமர்சனங்களை அல்லாஹ் பொய்ப்பித்தான். அத்தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால் கடைசிவரை என்மீது பூசப்பட்ட மஹிந்த சாயம் இருந்திருக்கும். 

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மிகவும் நெறுக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளனர். புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அதற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் எமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளோம். ஆனால், கிழக்கு முஸ்லிம்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இது குறித்து மௌனமாக உள்ளமை கவலையளிக்கின்றது.  

எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அரசியல் போராட்டத்தினை முழுத் தேசியத்தையும் மையப்படுத்தி முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்குத் தலைமை தாங்குகின்ற மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்துடன், முஸ்லிம்கள் நாட்டின் எந்தவொரு மூலையில் வசித்தாலும் அவர்களுக்கு பிரச்சினையொன்டு ஏற்படுமானால் அதற்கு எதிராக குரல் எழுப்பி உதவி செய்யும் முதலாவது பிரதேசமாகவும் காத்தான்குடி மாநகரம் கட்டியெழுப்பப்ட வேண்டும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: