12 Nov 2017

கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த சந்தர்ப்பம் கிட்டவில்லை என்ற வக்கிரத்தால் சிலர் இப்போது பிதற்றுகிறார்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத்

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலமுகா வும் ஏனைய கட்சிகளும் இணைந்து முன்கொண்டு சென்ற எனது தலைமையிலான கிழக்கு மாகாண சபை ஆட்சியில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்த சந்தர்ப்பம் கிட்டவில்லை என்ற வக்கிரத்தால் சிலர் இப்போது பிதற்றுகிறார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் தமிழ் மாணவர்கள் சுமார் 5000 பேருக்கு பாடசாலைப் புத்தகப்பை, எழுது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை  12.11.2017 ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@ நான் மதிப்பளிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் இன முறுகலை ஏற்படுத்துவதற்காக நான் முயற்சிப்பதாக பொய்யான அபத்தமான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியிருந்தார்கள்.

இதுபற்றி இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் நன்கு அறிவார்கள். இன வாதத்தைக் கையிலெடுத்து அரசியலுக்குள் நுழைந்து இன்னமும் அதனையே ஒரு கருவியாகப் பாவித்து இனிவரும் காலங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெற எவரெவர் முயற்சிக்கின்றார்கள் என்பது வெளிப்படையான விடயம்.

இனவாதத்தை சிந்தித்து, பேசிப்பேசி, தூண்டி, செயற்பட்டு அரசியல் செய்கின்ற வக்கிரபுத்திக் கலாச்சாரத்தை நாங்கள் தமிழர்களும், முஸ்லிம்களும் சிங்களவர்களும் இணைந்த மாகாண சபை ஆட்சிக் காலத்திலே மாற்றியிருந்தோம். இதனை இனவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எங்களுடைய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு மூலை முடுக்கிலும் இனவாதம் என்ற பேச்சுக்கே இம்மியளவும் இடமில்லாமல் மூவினங்களும் இணைந்து ஆட்சி செய்திருந்தோம்.

எமது ஆட்சியிலே நாங்கள் இன பேதம், அரசியல் வேறுபாடு, மொழிப் பாகுபாடு, பிரதேச ஓரங்கட்டல் என்று எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து ஆட்சி செய்தோம்.
ஒற்றுமையாக ஒரே சிந்தனையில் மூழ்கியிருந்து சவால்களை முறியடித்து சகவாழ்வு ஆட்சியை சாதித்துக் காட்டினோம்.

கிழக்கு மாகாண ஆட்சி சுமார் ஒரு மாதம் முடிந்த கையோடு இனவாதத்தைத் தூண்டி மீண்டும் எரியும் நெரிப்பில் எண்ணெய் வார்த்தவர்கள் யார் என்பதை எல்லோரும் நன்கு அறிவார்கள்.

வாழைச்சேனையில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு பிரச்சினைக்கு அவர் என் மீது குற்றம் சாட்டுகின்ற ஒரு விடயம் கண்டிக்கத் தக்கது.

தமிழ் அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி முஸ்லிம் அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி வெறுமனே இனவாதத்தைத் தூண்டுகின்ற எந்தவொரு இழிவான அரசியல் கலாச்சாரத்தையும் மேற்கொள்ளாதீர்கள் என்று நான் இந்த இடத்தில் அனைவருக்கும் பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றேன்.

அவ்வாறு அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தைச் சீர்குலைப்பார்களாயின் அத்தகைய சுயநல அரசியல்வாதிகளை  மக்களாகிய நீங்கள் அடியோடு நிராகரித்து குழப்பவாதிகளின் வக்கிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வடக்க கிழக்கிலே தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்துதான் உரிமைகளைப் பெற்றுப் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை இனவாதத்தைத் தூண்டும் சுயநல அரசியல்வாதிகள் புரிந்துகொண்டாக வேண்டும்.”

SHARE

Author: verified_user

0 Comments: