12 Nov 2017

உயர் கல்வி கற்கும் மாணவர் மத்தியில் பல்லின அரசியல் மற்றும் சகவாழ்வு விழிப்புணர்வு தேவை

SHARE
தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன்
“உயர் கல்வி கற்கும் மாணவர் மத்தியில் பல்லின அரசியல் மற்றும் சகவாழ்வு பற்றிய விழிப்புணர்வு தேவை என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா  மனோகரன் தெரிவித்தார்.
யுத்தத்திற்குப் பின்னரான சகவாழ்வு, சமாதானம், அபிவிருத்தி, அரசியல் மறுசீரமைப்பு சம்பந்தமாக இளைஞர் சமுதாயம் அதன் ஈடுபாட்டைச் செலுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் பற்றிக் கேட்டபோது வியாழக்கிழமை 09.11.2017 அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர் இலங்கையில் அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து இனங்களுக்குமிடையிலான கலந்துரையாடல் திட்டத்தை தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்துள்ளது.

மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கமைவாக சமகால நாட்டு நடப்புக்கள் பற்றி உயர்கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் கல்வியியற் கல்லூரி பயிலுநர்களுக்கு முழுமையான தெளிவை ஏற்படுத்தும் வகையில் “அரசியல் மறுசீரமைப்பு” Constitutional Reforms), நிலைமாறு கால நீதி, மனித உரிமைகள், மத்தியஸ்த சபைச் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது நாட்டில் ஏற்கெனவே இடம்பெற்று முடிந்துள்ள யுத்தம், யுத்தத்தின் பின்னரான நிலைமை, தற்போதைய புதிய அரசில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பற்றி எதிர்கால ஆட்சியாளர்களான இந்த நாட்டின் இளைஞர் சமுதாயம் தெளிவடைந்திருக்க வேண்டும்.

பல்லின, கலாசார கலந்துரையாடல்களும் வாத விவாதங்களும், முரண்பாடுகளைப் பேசித் தீர்த்து அபிவிருத்திக்கான இலக்குகளை இணைந்து வடிவமைத்துக் கொள்ளும் புதிய கலாச்சாரமும் இளைஞர் சமதாயத்திற்கு இன்றியமையாதது” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: