12 Nov 2017

வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களே வறுமையில் முதல் 5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன்

SHARE
வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களே இலங்கையில் வறுமை நிலையில் முன்னிலை வகிப்பதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் இடம்பெறும் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து கேட்டபோது வியாழக்கிழமை 09.11.2017 அவர் இதனைத் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர்,
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்கள் முன்னிலை  இடங்களைப் பெற்று மிகக் கொடிய வறுமையான மாவட்டங்களாக இனங்காணப்பட்டிருக்கும் விடயம் அனைவரினதும் கரிசனைக்கும் உள்வாங்கப்பட வேண்டும்.

இதுவரை வறுமைக்கோட்டுக்குள் இருந்த மொனறாகலை, மற்றும் மன்னார் மாவட்டங்கள் முன்னிலை இடங்களிலிருந்து  விடுபட்டுள்ள அதேவேளை திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் வறுமைப் பட்டியலுக்குள் உட்புகுந்துள்ளன.

மேலும் மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்தும் வறுமை நிலையில் முதலாவது இரண்டாவது மூன்றாவது என்ற தர வரிசையில் வறுமை மாவட்டமாக மாறி மாறி அந்த வட்டத்திற்குள்ளேயே சுழல்கிறது.

ஒக்ரோபெர் மாத இறுதியில் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி கிளிநொச்சி மாவட்டம் 18.2 வீதம் வறுமையைக் கொண்டிருக்கும் இலங்கையின் முதலாவது மாவட்டமாகவும், முல்லைத்தீவு மாவட்டம் 12.7 வீத வறுமையுடன் இரண்டாவது மாவட்டமாகவும், 11.3 வீத வறுமையுடன் மட்டக்களப்பு மூன்றாவது வறுமை மாவட்டமாகவும், 10.0 வீத வறுமையுடன் திருகோணமலை நான்காவது வறுமை மாவட்டமாகவும், 07.7 வீத வறுமையுடன் யாழ்ப்பாணம் ஐந்தாவது வறுமை மாவட்டமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சனத்தொகை அடிப்படையில் கிளிநொச்சியில் 21,249 பேரும், முல்லைத்தீவில் 12,003 பேரும், மட்டக்களப்பில் 60,912 பேரும், திருகோணமலையில் 39,718 பேரும், யாழ்ப்பாணத்தில் 46,052 பேரும் வறுமைக்குட்பட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலேதான் வறுமை, நுண்கடன் தொல்லை, பாலியல் துஷ்பிரயோகம்,  போலி நாணயத் தாள்களின் புழக்கம் என்பன அதிகளவில் உள்ளன.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: