இலங்கைத் திட்டமிடல் சேவையின் 3ஆம் தரத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு பொது நிருவாக அமைச்சினால் கோரப்பட்டிருந்த விண்ணப்பங்கள் இலங்கைத் திட்டமிடல் சேவையின் பிரமாணக் குறிப்புக்கு முரணானது என இலங்கைத் திட்டமிடல் சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கவனமெடுக்குமாறு தாம் ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொது நிருவாக அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக இலங்கைத் திட்டமிடல் சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்லம் தெரிவித்தார்.
இலங்கைத் திட்டமிடல் சேவையின் பிரமாணக் குறிப்பின்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து முதலாம் இரண்டாம் வகுப்பு சித்தி பெற்றவர்கள் திறந்த போட்டிப் பரீட்சையில் தோற்றுவதற்கு தகைமை பெறுகின்றனர்.
பொருளியல், புள்ளிவிவரவியல் போன்ற பாடங்களை பல்கலைக்கழகப் பட்டத்திற்காகக் கொண்டவர்களும் இலங்கைத் திட்டமிடல் சேவையின் 3ஆம் தரத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
எனினும் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் இரசாயனவியலை ஒரு பாடமாகக் கொண்ட விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றவரும், விஞ்ஞானவியலை ஒரு பாடமாகக் கொண்டு விஞ்ஞானமானி முதலாம் இரண்டாம் வகுப்பு சித்தி பெற்றவர்களும் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலால் பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகள் மேற்படி இலங்கைத் திட்டமிடல் சேவைக்குள் உள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன.
இது ஒரு அடிப்படை மீறலாகும் எனவே, இந்த அறிவித்தலை கலை மற்றும் வர்த்தகப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கும் வகையில் வெளியிடுமாறும் இலங்கைத் திட்டமிடல் சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment