25 Oct 2017

மத்திய கிழக்கு செல்வோரில் மட்டக்களப்பு மக்கள் 5வது இடம். கடந்த 4 வருடங்களில் 210 பேர் தொடர்பற்றுள்ளார்கள்

SHARE
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களில் மட்டக்களப்பு மாவட்டம் 5வது இடத்தைப் பெற்றிருப்பதாக கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனப் பணிப்பாளர் (Eastern Self Reliant Community Awakening Organisation) எஸ். ஸ்பிரிதியோன் Spiritheyonதெரிவித்தார்.

“எஸ்கோ” நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் பணிப்பெண்களின் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக புதன்கிழமை 25.10.2017 மேலும் தெரிவித்த அவர்
வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் வாய்ப்புப் பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோர் சட்டப்படியான வழிமுறைகளின் மூலம் சென்றால் சட்டப்படியான உதவிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணயகத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இதுபற்றி நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை அமுலாக்கி வருகின்றோம்.

எமது விழிப்புணர்வின் காரணமாக சட்ட விரோதமாக வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வோரின் எண்ணிக்கை சமீப காலங்களில் கணிசமாகக் குறைந்திருக்கின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டின் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர் புள்ளிவிவரங்களின்படி மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் 5வது அதிக எண்ணிக்கையான தொழிலாளர்களை மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைத்த மாவட்டமாகவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து 4111 பெண்களும் 15870 ஆண்களுமாக மொத்தம் 19981 பதிவு செய்யப்பட்ட நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.

இதேவேளை 2015 காலப்பகுதியில் 31410 பேர் என்ற எண்ணிக்கையில் அதிகப்படியானோர் மத்திய கிழக்குக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற மாவட்டமாக கொழும்பும், இரண்டாவதாக 26648 பேர் கண்டியிலிருந்தும், 3வதாக 26010 பேர் கம்பஹா மாவட்டத்திலிருந்தும், நான்காவதாக 24487 பேர் குருநாகலில் இருந்தும் சென்றுள்ளனர்.  

இதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டுவரையில் மட்டக்களப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்களில் 460 பேர்  தமது குடும்பங்களுடன் தொடர்பற்றி இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் தற்போது வரைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சிற்;கு 350 நபர்களின் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவற்றுள் 250 நபர்களின் தொடர்புகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் இன்னும் 210 நபர்களின் தொடர்புகள் அற்றுப்போயுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: