இன்னும் ஓரிண்டு மாதங்களில் முடிவடையவுள்ள மாகாண சபைகளையும் அடுத்த வருடம் முடிவடையவுள்ள மாகாண சபைகளையும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபடுவது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் பெரும் அநியாயமும் துரோகமுமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் வியாழக்கிழமை 10.08.2017 விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
செப்டெம்பெர் மாதத்தில் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபை மற்றும் சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலையும் மற்றும் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படும் காலங்களை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை நல்லாட்சி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
புரையோடிப்போன இனப்பிரச்சினை தீர்வின் ஓர் வடிவாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை ஓரளவுக்கேனும் மாகாண மட்டத்தில் பரவலாக்கும் செயன்முறையாக காணப்படும் மக்களின் உரிமை இது.
இதனை நாடாளுமன்றம் கையகப்படுத்தி தான் நினைக்கின்ற திகதியில் மாகாண சபையை கலைப்பதற்கான அரசியலமைப்பின் இருபதாவது மசோதாவை தோற்கடிக்க வேண்டும்.
இதற்கு சிறுபான்மை மக்களின் உரிமையை உறுதிப்படுத்த சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதிப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.
நல்லாட்சி கதாநாயகர்களின் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடையும் என்பதற்கான காரணத்தை மனதில் வைத்து தேர்தலை ஒத்திப்போட முயலுவதாக மக்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
தமது தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக மாகாண சபை தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை சமூகம் வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்ற வேண்டுமென்ற கருத்தாடல் மறைமுகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதையும் சிறுபான்மை சமூக அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
முன்மொழியப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் மாற்ற முறைமையில் சிறுபான்மையினர் பல தொகுதிகளை இழக்கும் நிலை காணப்படுகிறது.
இச்சூழ்நிலையில் பெருந்தேசிய வாதிகள் மாகாண சபை தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கதையாடலை அரசியல் வெளியில் உலாவவிட்டிருப்பது எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களினது அரசியல் உரிமையை வெகுவாகப் பாதிக்கும்.
ஆக சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் தற்போது இருக்கின்ற மாகாண சபை தேர்தல் முறையிலேயே உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.
மேலும் மக்கள் தேர்தலில் பங்கெடுத்தல் மற்றும் வாக்குரிமையை பிரயோகித்தல் அம்மக்களின் அடிப்படை அரசியல் உரிமையுடன் தொடர்புபட்ட முக்கியத்துவமிக்க ஒன்றாகும்.
தேர்தலை ஒத்திப்போடல் உரிய காலத்தில் நடத்தாமல் இருத்தல் மக்களின் வாக்குரிமை பிரயோகிக்கும் மக்கள் இறைமையை கேள்விக்குட்படுத்தும் விடயமாகும்.
இவ்விடயத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து மக்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்த முன்வரவேண்டும்”

0 Comments:
Post a Comment