10 Aug 2017

போரதீவுப்பற்றிலிருந்து விடைபெறும் உலகதரிசன நிறுவனம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டுவரை தமது சேவையினை மேற்கொண்டு வந்த வேள்விஸன் நிறுவனம் 2017.08.09 ஆம் திகதியுடன் தனது சேவைகளை முடித்துக் கொண்டு அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுகின்றது.
கடந்த 24 வருடகாலமாக இப்பிரதேசத்திலிருந்து கல்வி, சுகாதாரம், விளையாட்டு, விவசாயம், வாழ்வாதாரம், வீதி அபிவிருத்தி, மரம் நடுகை, குடிநீர்வசதி,  மற்றும் உட்கட்டுமான வேலைகள் என பல மில்லியன் கணக்கான நிதிகளைச் செலவு செய்து பல்வேறுபட்ட  அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வந்த இந்த தொண்டர் நிறுவனத்தின் சேவைக்காலத்தை “போரதீவுப் பற்றிக் பொற்காலம்”  என அப்பகுதி வாழ்பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம், வெள்ளம், வரட்சி மற்றும் ஏனைய காலங்களிலெல்லாம் வலது கரமாக இருந்த துயர் துடைந்து வந்த இவ்வமைப்பின் சேவைகளுக்கு மகுடம் சூட்டும் முகமாக போரதீவுப் பற்று பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அந்நிறுவனத்திற்கு நன்றி கூறும் விழா புதன்கிழமை (09) மட்.வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேள்ட் விஸன் லங்கா நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் தனன் சேனாதிராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுடிருந்தார். மேலும் இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், வெல்லாவெளி பொதுசுகாதார வைத்திய அதிகாரி த.குணராஜசேகரம், கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன், பிரதேச சபையின் செயலாளர் அ.ஆதித்தன், மற்றும் வேள்விஸன் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர்கள், வலய, பிராந்திய முகாமையாளர்கள், அரச உயர் அதிகாரிகள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கடந்த 24 வருடகாலமாக இப்பிரதேசத்திலிருந்து அங்குள் மக்களுக்குச் சேவை செய்த இந்நிறுவனத்தின் உத்தியோகஸ்த்தர்களுக்கும், இந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்கள் வேவைகளை இலகு படுத்திய அரசாங்க உயர் அதிகாரிகளுக்கும் இதன்போது ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, 24 வருட காலமாக இப்பிரதேசத்திற்கு பல சேவைகளை மேற்கொள்வதற்கு காரண கர்த்தாவாக இருந்த வேள்விஸன் நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளருக்கு இதன்போது பொன்னாடை போர்த்தி, வாழ்த்து மடல் மற்றும் ஞாபகச் சின்னம் வழங்கி, கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





















































SHARE

Author: verified_user

0 Comments: