தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு வாழுகின்ற சந்தர்ப்பங்களை நழுவ விட்டு முரண்பட்டு காவியுடைப் பேரினவாதத்தை களத்திற்குக் கொண்டு வருவது ஆபத்தானது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் வீதிகளைப் புனரமைத்தல், மற்றும் சுயதொழிலுக்கான உபகரணத் தொகுதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் ஏறாவூர் நகரில் புதன்கிழமை இரவு 16.08.2017 இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதியமைச்சர் தொடர்ந்து பேசுகையில்,
தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருக்கின்ற முரண்பாடுகளை பேரினவாத காவியுடை தரித்தவர்கள் வந்து நீதிவானாக நின்று நீதி சொல்லுகிற ஒரு சங்கடமான சூழ்நிலைக்குள் நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்
காணிப் பிரச்சினை முஸ்லிம்களுக்கும் உள்ளது தமிழர்களுக்கும் உள்ளது.
தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் எல்லைப் புறங்களிலே இந்தப் பிரச்சினை இருக்கின்றபோது அதனைப் பார்த்து அக்கறை எடுத்துத் தீர்த்துக் கொள்வதற்கு சமூகத் தலைவர்கள் இருக்கிறார்கள், கோயில் பள்ளிவாசல் பரிபாலகர்கள், தர்ம கரத்தாக்கள், மக்கள் பிரதிநிதிகள் நிருவாக அதிகாரிகள் போன்றோர் இருக்கிறார்கள்.
அதேவேளை காவியுடை தரித்தவர்கள் கைக்கூலிக்கு எங்கிருந்தோ ஆட்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து இயல்பு நிலையைக் குழப்பி இனமுறுகலை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறார்கள்.
இதனையிட்டு இரு சமூகங்களும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
எங்களுக்காகப் பரிந்து பேசுவதாகச் சொல்லிக் கொள்ளுகின்ற இந்தக் காவியுடைக் காரர்களின் பேரினவாத சூழ்ச்சியால் சிறுபான்மை இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் அழிவடைந்த வரலாறு உலகறிந்ததே.
இப்பொழுது அதே பேரினவாத காவியுடைக்காரர்கள் தமிழரையும் முஸ்லிமையும் முட்டி மோத வைத்து அழிவுகளை ஏற்படுத்த ஆவலாய் இருக்கும் நயவஞ்சகத்தனத்தை தமிழரும் முஸ்லிமும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
காவியுடைக் காரர்களின் பேரிவாத தந்திரோபாயங்களை விளங்கிக் கொள்ள நாம் கலாநிதிப் பட்டம் பெறவேண்டியதில்லை. அது சாதாரண பாமர மகனுக்கும் பட்டவர்த்தனமாகத் தெரியும்.
இந்த விடயத்தில் தமிழ் முஸ்லிம் பொது மக்களும் இரு சமூக அரசியல் தலைமைகளும் கருத்தொருமித்து கவனமாகக் காரியமாற்ற வேண்டும்.
இல்லையேல் சிறுபான்மை இனங்கள் சிதைக்கப்பட்டு அவர்களின் வரலாறே இல்லாமல்; இந்த பேரினவாதக் காவியுடைகள் சிறுபான்மையை அழித்து விடும்.
வடக்கு கிழக்கிலும் இந்த மாவட்டத்திலும் இருக்கின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் முரண்பாடுகளை மறந்து இப்பொழுது கைகோர்த்திருக்கின்றோம்.
இந்த உறவு இன்னமும் இறுக்கமானதாக வளர்ந்து பேரினவாத காவியுடைத் தந்திரத்தை முறியடிக்க வேண்டும்.
எல்லா விதிகளையும் சட்ட திட்டங்களையும் மீறி காவியுடை தரித்த பேரினவாதம் நீதி சொல்ல வருவது முதலைக் கண்ணீரேயன்றி வேறொன்றுமில்லை.
இந்த நாட்டின் பேரினவாதத் தீயால் கருகிய பாதிக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகங்கள் பேரினவாத காவியுடைக் காரர்களின் கபடத்தனமான கோஷங்களை நம்பி மோசம் போகக் கூடாது.
கவனமாக இருந்து கொள்ளுமாறு நான் இந்த இரு சமூகங்களையும் பார்த்து அறைகூவல் விடுக்கின்றேன்.
காவியுடைகளிடம் போய் மண்டியிட்டு நியாயம் கேட்கிற நடைமுறையை தமிழர்களும் முஸ்லிம்கள் அங்கீகரிப்பார்களாயின் அது எதிர்காலத்தில் வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்களுக்கு மிகுந்த ஆபத்தையும் அழிவையும் ஏற்படுத்தும்.
பெரும்பான்மையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் இந்த விடயத்தில் தெளிவாக இருந்து கொண்டு தமிழ் முஸ்லிம் உறவுக்கு அத்திவாரமிடவேண்டும்.
பௌத்த பேரினவாதத்தின் காவலர்களான காவியுடைக் காரர்கள் ஒருபோதும் சிறுபான்மை இனங்களைக் காக்கப் போவதில்லை.
அதனால் சிறுபான்மையினராகிய நாம் மிகக் கவனமாக காய் நகர்த்த வேண்டும். அறிவுபூர்வமாக அணுகுமுறைகளைச் செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டும் ஒன்று சேர்ந்து எமக்கு முன்னே எரியும் நெரிப்பாக எதிர்கொள்கின்ற இனவாதத்தை முறியடிப்பதற்கு அறிவுபூர்வமான ஆணித்தரமான வியூகம் வகுக்க வேண்டும்.
ஒற்றுமைப்படுவதற்குப் பதிலாக இன்னமும் தங்களுக்குள் பிரிந்து நின்று செயற்பட்டால் அதனை வாய்ப்பாக வைத்துத்தான் சிறுபான்மையினரைச் சீரழிப்பதற்கான மிக சூட்சுமமான திட்டங்களை பேரினவாதம் வகுத்துக் கொண்டிருக்கின்றது.” என்றார்.
0 Comments:
Post a Comment