மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்கொள்ளும் வறட்சி மற்றும் வெள்ளப் பிரச்சினை குறுகிய காலத்துக்குள் தீர்வுக்கு வரும் என மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
சிறுபோகச் செய்கை வெற்றியளித்ததையிட்டு உன்னிச்சை விவசாயிகளால் இயற்கைக்கு நன்றி தெரிவித்துப் பிரார்த்திக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 11.08.2017 உன்னிச்சைக் குளம் நீரேந்துப் பகுதியில் உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே. யோகவேள் தலைமையில் நடைபெற்றது.
அங்கு அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவி@
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாகப் புனரமைப்புச் செய்யமுடியாமல் போன பல குளங்களைப் நாம் புனரமைத்திருக்கின்றோம். தொடர்ந்தும் சில குளங்களின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன.
இப்பொழுது 12500 மில்லியனுக்கும் அதிகமான தொகையை கித்துள் உறுகாமம் பெரு நீர்ப்பாசனக் குளங்களை இணைக்கும் வேலைத் திட்டத்திற்காக அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கியுள்ளது.
இதற்கு பிரெஞ்ச் நாட்டின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபெர் மாதம் அதன் வேலைத் திட்டங்கள் துவங்கவுள்ளன.
இதற்கும் மேலதிகமாக முந்தானையாற்று படுகையில் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற வறட்சியைத் தடுப்பதற்காக உலக வங்கி உதவி செய்யவுள்ளது.
அத்திட்டத்தின் கடைசி வரைவை நான் கொழும்பிலுள்ள உலக வங்கியின் அலுவலகத்தில் 3 மணித்தியாலங்கள் பார்வையிட்டேன். அது சிறப்பாக வரையப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான பங்குபற்றுநர்களுடைய கூட்டம் எதிர்வரும் செப்ரெம்பெர் மாதம் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்நோக்கும் 70 சத வீதத்திற்கு மேலான வெள்ளம் மற்றும்; வறட்சிப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டு விடும்.
அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையிலே ஒரு மறுமலர்ச்சியும் வந்து சேரும்.
குளங்களைப் புனரமைக்கும் திட்டத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிய முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 1134 கிலோமீற்றர் உள்ளக விவசாய வீதிகள் உட்பட குளங்களைப் புனரமைக்கும் அந்தத் திட்டமும் கிரான் பாலத்தைப் புனரமைப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இரச்சகல் புலுட்டுமானோடை உள்ளிட்ட குளங்களை முழுமையாகப் புனரமைப்பு செய்துள்ளோம்.
பல தடைகளுக்கு மத்தியில் நாம் இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திச் சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றோம். அது கண்டு கொள்ளப்படாத போதிலும் அதன் நீண்டகால நன்மைகளை இந்த மாவட்ட மக்கள் அனுபவிக்கப்போவதையிட்டு எமக்கு பூரண ஆத்ம திருப்தியுள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment