18 Jul 2017

ஏறாவூர் நகர சபைக்கு இறுதி எச்சரிக்கை மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர்

SHARE
வருடாந்த நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டு வந்து சேர்த்தபோதும் நகரை அபிவிருத்தி செய்யும் திட்டங்களில் நகரசபை அதிகாரிகள் அசமந்தப் போக்காக நடந்து கொள்வதால் ஏறாவூர் நகர சபைக்கு இறுதி எச்சரிக்கை விடுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை (17.07.2017) பிற்பகல் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா உட்பட அதிகாரிகளும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இங்கு கலந்து கொண்டனர்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 2017ஆம் ஆண்டில் அமுலாக்கப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் பற்றி ஆராயப்பட்டபோது ஏறாவூர் நகர சபை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதில்லை என்று சுபைர் குற்றஞ் சாட்டினார்.

தொடர்ந்து அதுபற்றிக் கருத்து வெளியிட்ட அவர்@

அமுலாக்கப்படவிருக்கின்ற புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒத்துழைப்பை நகர சபை வழங்காவிடில் அரும்பாடுபட்டு இப்பிரதேசத்திற்கு நாம் கொண்டு வந்து சேர்க்கும் நிதிகள் திரும்பிச் செல்லக் கூடும். இது கவலையான விடயம்.
நகர சபை அதிகாரிகள் தொடர்ந்தும் இழுத்தடித்து அசமந்தப் போக்கைக் காண்பிப்பார்களாயின் அதனை ஒரு விளையாட்டாகக் கருதாமல் இதுபற்றி ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டி வரும் என்பதை எச்சரிக்கின்றேன்.

முதலமைச்சர் மீது பழிவிழவேண்டும் என்பதற்காக நகரசபை அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்களா என்பதையும் ஆராய்ந்து முதலமைச்சரின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

நகரில் இடம்பெறும் எந்த அபிவிருத்திச் செயற்பாடுகளைப் பற்றிக் கேட்டாலும் தமக்குத் தெரியாது என்று நகரசபை அதிகாரிகள் கூறுவது நகைப்புக்கிடமாகவுள்ளது.

பலகோடி ரூபாய் பெறுமதியான தொகையில் ஏறாவூரில் அமைக்கப்பட்டு வருகின்ற நவீன பொதுச் சந்தைத் தொகுதி, பெண் சந்தை கட்டிடத் தொகுதி, கலாச்சார மையம் உட்பட எந்த அபிவிருத்தித் திட்டத்துக்குமுரிய எந்த ஆவணங்களும் தம்மிடம் இல்லை என்று நகர சபை அதிகாரிகள் கூறுவது நம்ப முடியாததாக உள்ளது.

நகரசபையின் நிருவாகத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பி ஒரு செங்கல்லைக் கூட அகற்ற முடியாததாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பான நிருவாகத்துக்கு அழகு. ஆனால், இங்கு நடப்பது ஒன்றுமே நகரசபைக்குத் தெரியவில்லை என்றால் நாம் யாரிடம் கேட்டறிந்து கொள்வது. எனவே, இது தொடருமாக இருந்தால் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவதைத் தவிர வேறுவழியில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: