வகை 2 ஐச் சேர்ந்த டெங்கு வைரஸ் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகார் கலையரசி துரைராசசிங்கம் தெரிவித்தார்.
ஏறாவூரில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்திருப்பது குறித்து அவர் திங்கட்கிழமை (17.07.2017) பிற்பகல் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவரித்தார்.
இக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர்மௌலானா மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் உட்பட திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து விவரம் வெளியிட்ட சுகாதார வைத்திய அதிகாரி@
இவ்வாண்டின் ஜனவரி தொடக்கம் ஜுலை 17 வரையான காலப்பகுதியில் 552 டெங்கு நோயாளர்கள் ஏறாவூர் நகர பிரதேசப் பிரிவில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் இந்த எண்ணிக்கை வெறும் 19 பேராகத்தான் இருந்தது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 90 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பது கவலை தரும் விடயம்.
அதிருஷ்டவசமாக மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று நிம்மதியளிக்கிறது.
பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை நாங்கள் கண்டுபிடித்திருந்தோம்.
டெங்கு நுளம்புகளால் காவிச் செல்லப்படும் வைரஸ் இந்தத் தடவை வகை 2 என அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இது ஆபத்தானது. கிண்ணியாவிலும் ஆகக் கூடுதலான மரணங்கள் சம்பவிப்பதற்கு வகை 2 வைரஸே காரணமாக அமைந்திருந்தது.
இதுவரை இப்பிரதேசங்களில் வகை 1 வைரஸின் தாக்கமே ஏற்பட்டிருந்தது.
வகை 1 வைரஸினால் முதல் தடவையாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டாவது தடவை வகை 2 வைரஸால் பாதிக்கப்படுவாராயின் அது மரணம் வரை இட்டுச் செல்லக் கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன.
பிரதேசங்களில் முக்கியமாக டெங்கு உற்பத்தியாகிப் பரவுவதற்குத் தோதான இடங்களாக கிணறுகளும் மேல் நீர்த்தாங்கிகளும் இருக்கின்றன என்பதை பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
கிணறுகளுக்கு வலைகள் இடுவதில் மக்கள் ஆர்வமில்லை. நுளம்புகளை உண்டு அழிக்கக் கூடிய மீன்களையும் கிணறுகளில் போட வேண்டும். மீன் உள்ள கிணறுகளில் குளோரின் இட்டால் மீன்கள் அழிந்து விடும்.
சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் டெங்கை ஒழிப்பது மிகவும் சிரமமான விடயம்.
பாடசாலைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் நடமாட்டம் அவதானிக்கப்பட வேண்டும்.
எனவே, நாங்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். விழப்புணர்வை இன்னும் மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும்.”என்றார்.
0 Comments:
Post a Comment