மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப்பாளராக நியமனம் பெற்றுள்ள தினகரன் ரவி அவரது சொந்தக் கிராமமான திகிலிவெட்டையில் கிராம மக்களால் பெரு வரவேற்பளிக்கப்பட்டார்.
நியமனம் பெற்ற பின்னர் முதன் முதலாக புதிய வலயப் பணிப்பாளரின் சொந்தக் கிராமமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் எம். தவனேஸ்வரன்; தலைமையில் சனிக்கிழமை (03.06.2017) இந்த வரவேற்பும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதி கஷ்டப் பிரதேசமான திகிலிவெட்டைக் கிராமத்திலுள்ள ஆலயங்கள், பொது சமூக அமைப்புக்கள், கிராம மக்கள், பாடசாலை சமூகம் ஆகியோருடன் புதிய வலயக் கல்விப் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், கல்குடா கல்வி வலய அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒதுக்குப் புறக் கிராமமான திகிலிவெட்டையிலிருந்து கல்வி கற்று அந்தக் கல்வி வலயத்திற்கே பணிப்பாளராய் முன்னேறியிருப்பது பாராட்டு நிகழ்வில் உரையாற்றிய அனைவராலும் சிலாகித்துப் பேசப்பட்டது.
நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளரின் பெற்றோர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

0 Comments:
Post a Comment