மட்டக்களப்பு வாவி கல்லடி பழைய பாலத்தில் சைக்கிள், பாடசாலைப் புத்தகப் பை மற்றும் காலணி என்பனவற்றைக் கழற்றி வைத்து விட்டு மாயமாய் போன மாணவனின் சடலம் மறுநாளான வியாழக்கிழமை 08.06.2017 காலை கல்லடிப் பாலம் வாவியருகில் கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டது.
மாயமாய் மறைந்த மாணவனைத் தேடும் பணியில் மட்டக்களப்பு பொலிஸாரும் காத்தான்குடிப் பொலிஸாரும் கடற்படையினரும் மீனவர்களும் மாணவனின் உறவினர்களுமாக இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
இவ்வேளையில் புதன்கிழமை இரவு பகலாகத் தேடியும் மாணவனைக் கண்டு பிடிக்க முடியாதிருந்த வேளையில் வியாழக்கிழமை காலை சடலம் வாவியில் கரையொதுங்கியிருந்தது.
புதன்கிழமை 07.06.2017 காலை கல்லடி பழைய பாலத்தின் வாவியருகே மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் உயர்தர கணிதப் பிரிவில் கற்கும் அம்பிளாந்துறையைச் சேர்ந்த கருணாகரன் பவனுஷன் (வயது 16) என்ற மாணவனின் சைக்கிள், புத்தகப் பையும் காலணியும் காணப்பட்டுள்ள நிலையில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது.
உடனயாக ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸார் கடற்படையினர் ஆகியோருடன் மீனவர்களும் இணைந்து மட்டக்களப்பு வாவியில் தேடுதலை ஆரம்பித்திருந்தனர்.
தற்போது உடற் கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசமான அம்பிளாந்துறையைச் சேர்ந்த மேற்படி மாணவன் மட்டக்களப்பு நகரப் பகுதியான கல்லடியில் தனது உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment