மாணவர்கள் விளையாட்டுக்களில் மட்டுமன்றி அவர்களது ஆரோக்கியமான வாழ்வுக்கும் சிறந்து பிரகாசிக்க போஷாக்கான உணவும் பயிற்சிகளும் அவசியம் என மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார்.
விளையாட்டு அமைச்சினால் ‘கிரீடா சக்தி’ வேலைத் திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் விளையாட்டு வீர வீராங்கனைகளின் உடல் ஆரோக்கிய மேம்பாட்டுக்கென கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை பிற்பகல் 07.06.2017 வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் மாணவர்கள் அலவலர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு விளையாட்டு வீரர் தனது விளையாட்டினை திறம்பட மேற்கொள்வதானால் அவரது உடல் ஆரோக்கியம் மிக அவசியமானதொன்றாகும். உடல் திறனை மேம்படுத்துவதற்கு போஷாக்கான உணவுகளை உட்கொள்வதுடன் அன்றாடம் தியானங்கள் உள்ளிட்ட உடற் பயிற்சிகளிலும் ஈடுபடவேண்டும்.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசாங்கம் பல வழிகளில் திட்டங்களை வகுத்து அமுலாக்கி வருகின்றது.
உடல் ஆரோக்கிய போஷாக்கு மேம்பாட்டுக்கென வழங்கப்படும் உதவிக் கொடுப்பனவினை உரிய தேவைக்காக மட்டும் பயன்படுத்தி விளையாட்டுத் துறையில் மேலும் சிறந்த முறையில் பிரகாசிக்க வேண்டும்” என்றார்.
விளையாட்டுக்களில் திறமைவாய்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பாரம்பரிய விளையாட்டு வீர வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் போஷனை மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் அரசினால் மாதாந்தம் 1440.00 ரூபா வீதம் வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் அவ்விதம் தெரிவு செய்யப்பட்ட 83 பேருக்கு 2016 ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான காசோலையே வழங்கப்பட்டது.
தொடர் மாதங்களுக்கான கொடுப்பனவு எதிர்காலத்தில் கிரமமாக வழங்கப்படவுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, கணக்காளர் வி. வேல்ராஜசேகரம், விளையாட்டு உத்தியோகத்தர் வி. பூபாலராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment