13 May 2017

களுவாஞ்சிகுடியில் இரத்த பரிசோதனையை மேற்கொண்டவர்கள் மலேரியா தடுப்பு பிரிவினரே. சுகாதார வைத்திய அதிகாரி எஸ். கிருஸ்ணகுமார்

SHARE
களுவாஞ்சிகுடியில்   இரத்த பரிசோதனையை மேற்கொண்டவர்கள் மலேரியா தடுப்பு பிரிவினரே. இதற்காக  மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எஸ். கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.
அண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையினையடுத்து  மக்களிடத்தில் ஏற்பட்ட பீதிநிலையுடன் கூடிய சந்தேகத்தை போக்கும் முகமாக அவரிடம்  வினாவிய போதே அவர் தெரிவித்தார்.
மாவட்டம் பூராக குறித்த இரத்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமே களுவாஞ்சிகுடியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  குறித்த பரிசோதனை  நடவடிக்கை  மலேரியா தடுப்பு பிரிவின்  பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.மகேந்திரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு கட்டம் 28.04.2017 திகதி மக்கள் வங்கி வீதி முன் பகுதியிலும், நகர் பகுதியிலும்  பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் 1-5 வயதுபிரிவில் 01 நபருக்கும், 6-10 வயது பிரிவில் 02 பேருக்கும், 11-15 வயது பரிவில் 07 பேருக்கும், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் 33 பேரும் மொத்தமாக 43 பேருக்கு முதற்கட்டமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
  
இரண்டாம் கட்டமாக மக்கள்வங்கி வீதியியல் பின்பகுதியில் 09.05.2017 திகதி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 15 வயதிற்கு மேற்பட்ட ஒரு ஆண் உட்பட 10 பெண்களுக்கும் மொத்தமாக 11 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் எமது திணைக்களம் பொறுப்பு எனவும், இது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் முகமாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிராந்திய மலேரியா தடை வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி மேகலா ரவிச்சந்திரனிடம் வினாவியபோது. மலேரியா தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே குறித்த பரிசோதனையை வருடாவருடம் மேற்கொண்டு வருகின்றோம்.  இலங்கையில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்வதற்காகவே இப் பரிசோதனை வருடா வருடம் நடாத்தப்படுகின்றது. பரிசோதனை வரலாற்றில் ஒரு போதும் இவ்வாறான சந்தேகம் மக்களுக்கு எழுந்ததில்லை ஆனால் தற்போது இப் பரிசோதனை தொடர்பில் மக்களுக்கு பீதி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகின்றேன். இதனை நான் கவனத்தில் எடுத்து எனது மேலதிகாரிகளுடன் கலந்துரையாடி மக்களின் பீதி நிலையை போக்க நடவடிக்கை எடுப்பேன் என அவர் இதன்போது உறுதியளித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: