1 Mar 2017

மட்டக்களப்பு காணி அதிகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு வாரத்தின் பின் ஒருவர் கைது.

SHARE
கடந்த 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் பணிப்பாளர் நே.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக புதன்கிழமை 01.03.2017 சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த ஒரு வாரகாலமாக இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசாங்க உத்தியோகத்தர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டி வந்த நிலையில் இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது.

கடந்த 22ஆம் திகதி இரவு 7 மணியளவில் களுதாவளை 4 ஆம் பிரிவில்  அமைந்துள்ள சோமசுந்தரம் வீதியிலுள்ள விமல்ராஜின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இருவர்,  விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு சென்றிருந்தனர்.

காயங்களுக்குள்ளான விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: