1 Mar 2017

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

SHARE
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள  நாவலடி எனுமிடத்தில் கடந்த 27.02.2017 அன்று இடம்பெற்ற வீதி விபத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என். திரவியம் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும் 6ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

வாகரையில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த மக்கள் சந்திப்பொன்றுக்காக வேன் ஒன்றில் திரவியம் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி விபத்து சம்பவித்திருந்தது.

அதன் பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையில் அங்கு குழுமியவர்கள், தன் மீது தாக்குதல் நடத்தியதாக திரவியம், பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், சந்தேக நபரை  செவ்வாய்க்கிழமை (28.02.2017) மாலை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதன்போது பாதிப்புக்குள்ளான மாகாண சபை உறுப்பினர் திரவியம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏறாவூரைச் சேர்ந்த மீன் வியாபாரியான அலியார் முஸாதிக்கீன் என்பவரும் விபத்தில் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து இடம்பெற்றபோது உடனடியாக  அங்கு குழுமியவர்கள் விபத்துக்குள்ளான உறுப்பினரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயன்றதாகவும் எனினும், அங்கிருந்தவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இதேவேளை, உறுப்பினர் திரவியத்தை இரண்டொரு பேர் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனது வாகனத்திலிருந்து இறங்கிய உறுப்பினர் திரவியம், விபத்தில் சிக்கிய மீன் வியாபாரியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: