8 Feb 2017

கிழக்கு மாகாணத்திற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகளாவது தேவை கிழக்கு முதல்வர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாயின் குறைந்தபட்சம் 20 ஆயிரம் வீடுகளாவது தேவை, இதனைத் தந்துதவுமாறு நான் மத்திய
அரசைக் கேட்டிருக்கின்றேன் என கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது விடயமாக செவ்வாய்க்கிழமை (07.02.2017) கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த அபிவிருத்தி எனும் பொழுது வீடமைப்பு முக்கிய தேவையாகவுள்ளது.

இந்த மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தில் அதிகம் இழப்புக்களைச் சந்தித்ததோடு தமது வீடு வாசல்களையும் இழந்திருக்கின்றார்கள்.

எனவே, அவர்களுக்கு குடியிருக்க வீடுகள் தேவை. கடந்த வாரம் ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தின்போது 1762 பேருக்கு எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருக்கின்றன.

862 குடும்பங்களுக்கு வீடு திருத்துவதற்காக 2 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளன. இது நாம் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பலாபலனாகும்.
ஆயினும் இதற்கும் மேலதிகமாக இன்னமும் கிழக்கு மகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாயின் குறைந்தபட்சம் 20 ஆயிரம் வீடுகள் தேவை. அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 10 ஆயிரம் வீடுகள் தேவை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தததைச் செய்து கொடுப்பதில் நல்லாட்சிக்கு கடமை இருக்கின்றது.

2017ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் முடிந்தளவு மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு கிழக்கு மாகாண சபை அர்ப்பணிப்புடன் திட்டங்களை வகுத்து வருகின்றது.

யுத்தத்தினால் சகலதையும் இழந்த மக்கள் குறைந்தபட்சம் அவர்கள் நிம்மதியாக கால் நீட்டித் தூங்குவதற்கு ஒரு குடிமனை தேவை. 

இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

வீடமைப்புத் திட்டங்கள் அமுலாக்கப்படும்போது கிழக்கு மாகாண மக்களது வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்குமாறு நான் எப்பொழுதம் வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: