மட்டக்களப்பு வாகரைப் பிரதேச மக்கள் அதிக வட்டியுடனான கடன் சுமையிலிருந்து விடுபட தற்போது வழியேற்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ். ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.
வாழ்வாதார வழிமுறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு வாகரைப் பிரதேச செயலக வளாகத்தில் புதன்கிழமை (14.12.2016) “வியாபாரத் திட்டமிடல்” சந்தைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார வழிமுறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு வாகரைப் பிரதேச செயலக வளாகத்தில் புதன்கிழமை (14.12.2016) “வியாபாரத் திட்டமிடல்” சந்தைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியைத் திறந்து வைத்து அவர் உரையாற்றினார்.
பயனாளிகள், நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பிரதேச மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர்@ இதுவரை காலமும் இப்பிரதேசத்தில் சில நிறுவனங்கள் உள்நுழைந்து சுமார் 26 வீதம் என்ற அதிகரித்த வட்டி வீதத்தில் கிராம மக்களுக்கு கடன்களை வழங்கி மக்களைச் சுரண்டி கடன் சுமைக்குள்ளாக்கியிருந்தன.
இந்த நிலைமையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நாம் அயராது பாடுபட்டோம்.
கரையோரம் பேணல் திணைக்களம் உள்ளிட்ட இன்னும் சில நிறுவனங்கள் மக்களை அதிக வட்டிக்குக் கடன் பெறும் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு பங்காற்றியுள்ளன.
மக்கள் தங்களுக்கு ஏற்படும் அதிக வட்டிப் பாதிப்பை உணர்ந்து கொண்டதால் பாரியளவு வெற்றி கிட்டியுள்ளது. அதன் வெளிப்பாடே இன்றைய கண்காட்சியாகும்.
சுனாமி பாதிப்பு, போர்க்காலத்தில் கணவனை இழந்தவர்கள், தொழிற் பாதிப்பிற்குள்ளானவர்கள் என்று சுமார் 300 குடும்பங்கள் சிறுகைத் தொழில் கடன் முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டு இப்பொழுது அதில் வெற்றி கண்டுள்ளார்கள்.
கடன் கொடுக்கும் நிறுவனங்களின் வட்டி வீதம் பற்றிய விழிப்புணர்வு, சுரண்டல் ஆகியவை பற்றிய வியாபார திட்டமிடலின் பயனாக இந்த வெற்றி அடையப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் கடன் வழங்கு நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற்ற பயனாளிகளான வறிய கிராம மக்கள் இப்பொழுது விழிப்படைந்துள்ளார்கள்.
இதனால் அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களை இப்பொழுது மக்கள் புறக்கணித்துள்ளனர்.
வியாபாரத் திட்டத்தினூடாக கிராம மக்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டப்பட்டுள்ளார்கள்.
கரையோரம் பேணல் திணைக்களத்தினால் சமூக மட்ட அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் 7 அமைப்புக்கள் சமூக சேவைத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அந்த ஒவ்வோர் அமைப்புக்குமாக தலா 4 இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளன.
இது வட்டியில்லாக் கடன் சுழற்சி முறைமூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.
அதிக வட்டிச் சுமையிலிருந்து மீள, கடன் பெற, வியாபாரத்தை விரிவுபடுத்த, சேமிப்பை அதிகரிக்க, இத்திட்டம் பயனளிக்கிறது.
கிராம மக்கள் தங்கள் வியாபாரத்தின் திட்டத்தைத் தயாரித்து உற்பத்தியை மேம்பாடடையச் செய்வதே நோக்கமாகும்.
வாழ்வாதாரத்தை வழிப்படுத்துவதற்கான மார்க்கம் இப்பொழுது காட்சிப்படுத்தப்படுகின்றது.
மக்கள் இந்த வழிகாட்டலைப் பின்பற்றி தங்களது பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
கிராம மக்கள் தாங்களாகவே உற்பத்திப் பொருளாதாரத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்தப்படுகின்றது.
வெளியாரிடமிருந்து வரும் திணிப்புக்களால் எநற்த வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை” என்றார்.
செய்முறைப் பிரயோகமும் இக்கண்காட்சியில் இடம்பெற்றது.
இதுவரையில் சுய தொழில் முயற்சியில் ஈடுபடுபட்டு வருபவர்களின் உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



0 Comments:
Post a Comment