சிறுபான்மை முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலம் பெற்றோல் குண்டுகளால் தாக்கப்பட்டமை நல்லாட்சிக்கு ஒரு சவாலாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்டபாக முதலமைச்சர் செவ்வாய்க்கிழமை (நொவெம்பெர் 08, 2016) வெளியிட்டுள்ள அறிகச்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது@ குருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாயல் விஷமிகளால் பெற்றோல் குண்டுகள் மூலம் தாக்கப்பட்டமை அமைதியை சீர்குலைக்கும் மிக மோசமான காடைத்தனமாகும்.
இலங்கையில் இப்பொழுது நிலவும் நல்லாட்சியை சீர்குலைக்க பலர் பலவிதமான நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவதும் அவர்களின் இருப்பிடம் மற்றும் காணிகளைக் கபளீகரம் செய்வதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
பௌத்த மக்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளைக் கொண்டு வைத்து அம்மக்களைச் சீண்டுவதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்க விடயங்களாகும்.
எனவே இப்படியான எரிச்சலூட்டும் விஷமத்தனமான செயல்களைப் பொறுக்க முடியாத சிறுபான்மை மக்களே கடந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவைத்தமை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டிய ஒன்றாகும்.
ஆகவே இப்படியான கொடுமைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பள்ளிவாயல்கள், கோயில்கள் தாக்கப்படுதல் சிறுபான்மை மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுதல், விஷமத்தனமான ஆர்ப்பாட்டங்களால் முஸ்லிம், தமிழ் மக்களைச் சீண்டுதல் ஆகியவற்றை முற்றாகத் தடுக்கும் நடவடிக்கையை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
இதனைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசு தவறுமாக இருந்தால் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது கேள்விக்குறியாகும்;.
ஆகவே இந்த நல்லாட்சியை மாசுபடுத்த வெளியாகி, நச்சுக்கருத்துக்களை அள்ளி வீசும் நாசகார சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த அரசு கைது செய்ய வேண்டும். அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். தவறிழைத்த பெரும் புள்ளிகளை எல்லாம் கைது செய்யும் இந்த நல்லாட்சி அரசு, விஷமத்தனமான கருத்துக்களை நஞ்சாகப் பரப்பும் பொதுபல சேனாவின் செயலாளர் மற்றும் அந்தக் குழுவினர் செய்யும் அநியாயம் மற்றும் இனவாதச் செயல்களை இன்னும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பது ஏன் என்று பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை. இந்த நிலை இனிமேலும் நீடிக்கக் கூடாது.
இந்நாட்டில் வாழும் மூவினத்தையும் சேர்ந்த அனைத்து மக்களும் நிம்மதியாக வாழவேண்டும். அவர்களுக்கு மன அமைதி வேண்டும் என்ற நிலமையினை, அரசு மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்து மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment