அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணிக்கமடு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வரும் மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயமாக
அம்பாறை மாவட்ட சர்வமதப் பேரவையை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட அதிகாரி சாந்த பத்திரன தெரிவித்தார்.
மாயக்கல்லிமலை புத்தர் சிலை வைப்புக்கு அம்பாறை மாவட்ட சர்வ மதப் பேரவையில் அங்கத்தவராக உள்ள புத்த பிக்கு ஒருவரும் பின்னணியில் இருந்து முன்னின்று கருமமாற்றியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது குறித்துக் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்@ சர்வமத மற்றும் சர்வ இன அமைப்புக்களிலுள்ள அங்கத்தவர்களின் பரஸ்பர புரிந்துணர்வுடனான, சகோதரவாஞ்சையின் கருத்துப் பரிமாறல்கள் மூலமே அடிமட்டத்தில் உறுதியான சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என தேசிய சமாதானப் பேரவை உறுதியாக நம்புகின்றது.
அதன் அடிப்படையிலேயே மாவட்ட மட்டத்தில் அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வமதப் பேரவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்பிலுள்ள அங்கத்தவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக இன, மத, மொழி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் கடமையாற்ற வேண்டும் என்ற அபார எதிர்பார்ப்பு தேசிய சமாதானப் பேரவைக்கு உண்டு.
அம்பாறை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் குறிப்பிட்ட பௌத்த தேரர் புத்தர் சிலை வைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட சர்வ மதப் பேரவை கேட்கப்பட்டுள்ளது.
அறிக்கை கிடைத்ததும் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு மத, இன மக்களினதும் அவநம்பிக்கையையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளில் சர்வமதப் பேரவை அங்கத்தவர்கள் ஈடுபடக் கூடாது என்பதே அந்த அமைப்பின் அடிப்படை ஒழுக்கமாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை நாம் காலத்தின் தேவை கருதியும் இந்த நாட்டில் வாழப்போகும் எதிர்கால அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சந்ததிகளின் நன்மை கருதியும் செய்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment