1 Apr 2016

சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதற்கான சந்தர்ப்பங்களை வெளிநாடு செல்லும் தாய்மார்கள் அமைத்துக்கொடுக்க கூடாது . - ஞா.ஸ்ரீநேசன்

SHARE
தற்காலத்தில் தொழில் நிமிர்த்தம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தான விடயமாக உள்ளது. வறுமையால் தமது பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ளவும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைக்
கருத்தில் கொண்டும், குறிப்பாக தாய்மார்கள் வெளிநாடு செல்வதால் அவர்களின் பிள்ளைகள் அநாதரவாக்கப்படுகின்றார்கள். இதனால் பிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதுடன், துஷ்பிரயோகங்களுக்கும், உளவியல் ரீதியான உபாதைகளுக்கும், கலாசார சீரளிவுகளுக்கும் ஆளாகக் கூடிய நிலமைகள் காணப்படுகின்றன.

என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

வியாழக் கிழமை  மாலை (31) கித்துள் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.



இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்...

தாயொருவர், தந்தையின் அல்லது நெருங்கிய உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுச்செல்வதை எமது மாவட்டத்தில் அதிகமாக நாம் காண்கிறோம். இந்நிலமைகளில் உறவினர்களால் கூட சில பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆழாகிறார்கள். தரவுகளின்படி  உலகில் உள்ள சிறுவர்களில் நான்கு சதவீதத்துக்கும் அதிகமானோர் உறவினர்களாலும், பதினொரு சதவீதமானோர் உறவினர் அல்லாத ஆனால் குடும்பத்துக்கு மிகவும் பரிட்சயமான நபர்களாலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொடுப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது. 




ஒரு சில முகவர்கள் எமது பெண்களை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட நிர்ப்பந்திப்பதாக தொடர்ந்தும் ஊடகங்களின்‌ வாயிலாக அறிகின்றோம். கடந்த காலங்களில் மத்திய கிழக்கிற்கு தொழிலுக்கு அனுப்புவதாக சொல்லி எமது பிரதேசத்தில் இருந்து ஒரு தாயையும் அவரது மகளையும் அழைத்துச்சென்று, தாயை வெளிநாடு அனுப்பிவிட்டு மருதானையில் உள்ள விடுதியொன்றில் மகளை அடைத்துவைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

ஆகவே வறுமைக்கு ஒரே தீர்வு மத்திய கிழக்குதான் என்னும் எண்ணக்கருவை மாற்றி எமது பிரதேசங்களிலேயே வீட்டுத் தொட்டங்களை அமைத்தல், பண்ணை வளர்ப்புகள், தையல் என சிறு கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ள எமது பெண்கள் முன்வரவேண்டும்.  

நல்லாட்சி அரசாங்கம் ஒன்றில் கையூட்டுகள் கேட்பதோ, கையூட்டுகள் கொடுப்பதோ தப்பான செயற்பாடாகும், இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை யார் செய்தாலும் மக்கள் விளிப்பாக இருந்து உரிய இடங்களுக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி,  உயர் அரச அதிகாரிகளாக இருந்தாலும் சரி தண்டிக்கப்படவேண்டும்.

உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய பணியை ஆற்றுவதற்காகத்தான் அவர்களுக்கென அரச ஊதியங்கள் வளங்கப்படுகின்றன.  எமது மாவட்டத்திலும் தொழில் எடுத்து தருவதாக பல தொழில் தரகர்கள் ஈடுபடுவதாக அறியக்கிடைத்தது. இத்தகைய செயல்பாடுகளுக்கு நீங்கள் இடமளிக்கக்கூடாது அரசியல்வாதிகளுடன் நேரடியான தொடர்பினை வைத்துக்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: