15 Mar 2016

பிரபாகரன் தொடர்பான பேச்சு ஊடாக பல மர்ம முடிச்சுகள் அவிழலாம் - சந்திரகாந்தன்

SHARE
சரத் பொன்சேகாவின் பிரபாகரன் தொடர்பான பேச்சு ஊடாக பல மர்ம முடிச்சுகள் வெளிவரலாம். வெறுமனே மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கான அரசியலை நடத்தவேண்டும் என்பதற்காக வார்த்தைகளை வெளியிடுவது அரசியல் இராஜதந்திரமல்ல என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வெள்ளைக் கொடி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி பீல்ட் மார்சலும்  அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான கருத்துக்கள்  குறித்து கருத்துத் தெரிவித்த சந்திரநேரு சந்திரகாந்தன்,

தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் அமைச்சராக இருக்கின்ற சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.  பிரதி அமைச்சர் சரத் பொன்சேகாவின் இந்த பேச்சானது ஏதோ தொலைநோக்குப் பார்வையுடனான சந்தர்ப்பத்தினை முன்வைத்தே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்த முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் யுத்தத்தின் கடைசி நிமிடங்களில் நடைபெற்ற விடயங்கள் பற்றி பீல்ட் மார்சல் பொன்சேகா வெறுமனே ஒரு சில வார்த்தைகளைப் பேசிவிட்டுச் சென்றுவிட முடியாது. பாராளுமன்றத்திலோ வெளியிலோ இவ்விடயம் தொடர்பான பேச்சுக்கள் மௌமாக இருந்த வேளையில் சரத் பொன்சேகா அவர்கள் இந்த விடயத்தினை பேச்சுக்கெடுத்திருப்பது வித்தியாசமானதொரு பார்வையைக் கொண்டு வந்திருக்கிறது. என்னுடன் பேசப்பட்டு நடத்தப்பட்ட நான் நேரடியாகத் தொடர்புபட்ட இந்த வெள்ளைக் கொடி விவகாரத்துக்கு நீதி கிடைக்கப்போகின்ற சந்தர்ப்பமாகக் கூட இதனைப் பார்க்க முடியும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது இறுதி நிமிடங்கள் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்பட்டதானமு அதிர்ச்சியைக் கொண்டு வந்தாலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கான முயற்சியாகக் கூட இது இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளச் செய்கிறது.
பாராளுமுன்றத்தில் நீண்ட காலமாக மௌனமாக இருந்த விடயம் சரத் பொன்சேகா ஊடாக வெளியே கொண்டு வரப்படுகின்ற. இராணுவ உடையைக் களற்றிவிட்டு வெண்நிற உடையைத் தரித்துக் கொண்டாலும் அவர் தேவ தூதனல்ல.

இந்தத் தருணம் விசாரணை என்ற விடயத்தில் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டியது மிக முக்கியமாகும். இதற்குரிய காலம் வந்திருப்பதாக உணர்கிறேன். தேர்தல் காலங்களில் மாத்திரம் நமது அரசியல் தரப்பினர் காணாமல் போனவர்கள், கைதிகள், சர்வதேச விசாரணைகள் போன்ற தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் சார்ந்த விடயங்களினை முன்நிறுத்துவதனை தவிர்த்து வெள்ளைக் கொடி விவகாரத்தில் பொது மக்கள், பாதுகாப்புத் தரப்பிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள், முக்கிய உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள், முன்களப் போராளிகள், மகளிர் அணியினர், உள்ளிட்ட பலர் காணாமல் போனார்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இதனை விடுத்து வெறுமனே மஹிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கான அரசியலை நடத்தவேண்டு; என்பதற்காக வார்த்தைகளை  வெளியிடுவது அரசியல் இராஜதந்திரமில்லாத செயலாகும்.

இதன் ஊடாக பல மர்ம முடிச்சுகள் வெளிவரலாம். உளளக விசாரணையோ, சர்வதேச விசாரணையோ நடத்தப்படவேண்டும். இன்னும் காலம் தாழ்த்தப்படக்கூடாது.

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் எந்த ஒரு அரசியல் தலைமைகளோ, சர்வதேசமோ எந்த ஒரு விடயத்தினையும் செய்ததாக இல்லை.
அத்துடன் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அனைத்துத் தரப்பினரது பொறுப்பாகும். வெறுமனே பூச்சாண்டி காட்டுவதும் காலத்தினைக் கடத்துவது அனைத்து சமூகத்திற்கும் செய்கின்ற துரோகமாக இருக்கும்.

சர்வதேச நீதி விசாரணை வரும் வரையில் புலம்பெயர் சமூகங்களின் ஒத்துழைப்புகளுடன் வரை வெள்ளைக் கொடி விவகாரத்தின் நீதிக்காக குரல் கொடுப்பேன். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்த காணாமல்போன கடத்தப்பட்டவர்கள் தொடர்பான  விடயங்கள், எனது தந்தையின் படுகொலை, உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக தனிமனிதகான நின்று போராடுவேன் என அதரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: