2 Mar 2016

அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் திறன் அடிமட்ட மக்களிடையே வளர்க்கப்படல் வேண்டும் - த.வசந்தராஜா

SHARE
அனர்த்தம், அனர்த்தம் என நாம் அடிக்கடி பேசிவருகின்றோம். அனர்த்தம் என்றால் என்ன? அனர்த்தம் என்பது மக்கள் சொத்து அல்லது சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்வு. அத்தகைய நிகழ்வின்போது மக்களால் தாக்குப் பிடிக்கமுடியாத அளவுக்கு அழிவுகள், சேதங்கள் அல்லது இழப்புக்கள் ஏற்படும். இத்தகைய அழிவுகள் சேதங்கள் அல்லது இழப்புக்கள் மனித நடவடிக்கையினாலோ அல்லது இயற்கையினாலோ திடீரெனவோ அல்லது படிப்படியாகவோ ஏற்படுகின்றது. என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் உள்ள சர்வோதய பயிற்சி நிலையத்தில் மண்முனைமேற்கு பிரதேசசெயலக உத்தியோகத்தர்களுக்கான அனர்த்த ஆபத்துக் குறைப்பு மீள் நினைவூட்டல் பயிற்சியை புதன் கிழமை (02) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்கள், சொத்து அல்லது சூழலை அபாயம் ஒன்று தாக்கும்போதுதான் அனர்த்தம் உருவாகிறது. ஆனால் சரியான முறையில் அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதனூடாக அழிவு, சேதம் அல்லது இழப்பினை குறைக்கவோ அல்லது தணிக்கவோ முடியும். ஆகையால் கிராம மக்களிடையே அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்யும் திறன்கள் வளர்க்கப்படல் வேண்டும். ஏனெனில் அனர்த்தத்துக்கு முகம் கொடுப்பவர்கள் அந்தந்த கிராமங்களில் வாழும் மக்களேயாவர். 

அனர்த்த முகாமைத்துவம் என்றால் என்ன? அபாயம் ஒன்று கிராமத்தைத் தாக்கும்போது ஏற்படக்கூடிய இழப்புக்களை அல்லது பாதிப்புக்களை எவ்வாறு குறைத்துக் கொள்ளலாம் அல்லது தடுத்துக் கொள்ளலாம் என்பதற்கேற்ற செயற்பாடுகளை தீர்மானித்து அச்செயற்பாடுகளை எவ்வாறு செய்வது என திட்டமிட்டு திட்டமிட்டபடியே அவற்றை செயற்படுத்தி கண்காணித்து மீளாய்வு செய்யும் ஒரு படிமுறையான செயற்பாடே அனர்த்த முகாமைத்துவம் ஆகும். எனவே கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் இத்தகைய படிமுறைகளை பின்பற்றுதல்; வேண்டும். 

அதனாலேயே கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் ஒக்ஸ்பாம் மற்றும் மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம், போன்றோரின், ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அனர்த்த முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கிராமங்களில் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களான கிராம உத்தியோகத்தர்கள் முதலானோர்க்கு வழங்கிவருகின்றது என்றார்.

டி.எவ்.ஏ.ரி. எனும், நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஒக்ஸ்பாம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் வழிகாட்டலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மண்முனைமேற்கு பிரதேசசெயலகப் பிரிவில் 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அனர்த்த ஆபத்துக் குறைப்புத் திட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எஸ். இன்பராஜன், மண்முனைமேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் தேசிய அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் எஸ்.சிவநிதி, ஒக்ஸ்பாம் நிறுவன திட்ட உத்தியோகத்தர் எஸ்.ஜனந்தன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் வி.பிறேமக்குமார் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் பிரதம வளதாரியாகவும் முல்லைத்தீவு மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.கோகுலன் மற்றுமொரு வளதாரியாகவும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: